Published : 16 Apr 2016 02:45 PM
Last Updated : 16 Apr 2016 02:45 PM

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி: கே.என்.நேரு நம்பிக்கை

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திருச்சி மேற்கு தொகுதிக்கு கே.என்.நேரு, திருவெறும்பூர் தொகுதிக்கு மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பழனியாண்டி, லால்குடி தொகுதிக்கு சவுந்தரபாண்டியன், மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு கணேசன், துறையூர் தொகுதிக்கு ஸ்டாலின் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், திருச்சி சிந்தாமணியிலுள்ள அண்ணா சிலை, அன்பில் தர்மலிங்கம் சிலை, நீதிமன்றம் அருகிலுள்ள வ.உ.சி. சிலை, மத்திய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள பெரியார் சிலை, காமராஜர் சிலை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை, அரிஸ்டோ ரவுண்டானாவிலுள்ள அம்பேத்கர் சிலை, ரயில்வே ஜங்ஷன் பகுதியிலுள்ள ராஜீவ்காந்தி சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் தேர்தல் பணிகள் குறித்து கலைஞர் அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியபோது, “அதிமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் எந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைக்கவோ, தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தவோ நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது வெளியாகியுள்ள திமுகவின் தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த அனைத்து திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் திமுக ஆட்சிக்கு வரும். திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x