அம்பாசமுத்திரம் தொகுதியில் விஐபி வேட்பாளர்களை சமாளிக்குமா மார்க்சிஸ்ட்?

அம்பாசமுத்திரம் தொகுதியில் விஐபி வேட்பாளர்களை சமாளிக்குமா மார்க்சிஸ்ட்?
Updated on
1 min read

அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக, திமுக தரப்பில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்களை, எவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமாளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அம்பாசமுத்திரம், விக்கிரம சிங்கபுரம், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவ நல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், மணிமுத்தாறு ஆகிய பேரூராட்சிகளையும், 34 ஊராட்சிகளையும் உள்ளடக்கியது அம்பாசமுத்திரம் தொகுதி. விவசாயமே பிரதானம்.

முந்தைய வரலாறு

1952 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தலா 4 முறையும், மார்க்சிஸ்ட், திமுக வேட்பாளர்கள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இத்தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், அதிமுக சார்பில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் முருகையா பாண்டியன் போட்டியிடுகின்றனர். மிகவும் செல்வாக்குமிக்க இந்த இரு வேட்பாளர்களை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகிறார் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரான பி.கற்பகம் (41).

பலம் வாய்ந்த அதிமுக, திமுக வேட்பாளர்களை எதிர்த்து, எவ்வாறு இவர் சமாளிக்கப் போகிறார் என்பதே தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர் போராட்டங்கள்

கற்பகத்தின் கணவர் லட்சுமி சங்கர், தந்தை பொதிகாசலம், தாயார் சுப்புலட்சுமி என மொத்த குடும்பமும் கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர். கட்சி சார்பில் நடத்தப்படும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, போராட்டங்களில் சிறை சென்றுள்ளார் கற்பகம். இவரது தொடர் போராட்டங்களால் 426 பேருக்கு வீட்டுமனைப் பட்டா கிடைத்துள்ளது.

தொழிலாளர்கள் ஆதரவு

இத்தொகுதியில் நிறைந்துள்ள பீடித் தொழிலாளர்கள், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், வீரவநல்லூர் கைத்தறி தொழிலாளர்கள், பத்தமடை பாய் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானம், விவசாயத் தொழிலாளர்களின் வாக்குவங்கி தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மார்க்சிஸ்ட் கட்சியினர்.

தொகுதி மக்களின் கோரிக்கைகள் அடங்கிய சாசனம் ஒன்றை வெளியிட்டு, அவற்றை நிறைவேற்றும் வாக்குறுதிகளுடன் தேர்தல் பணியைத் தொடங்க மார்க்சிஸ்ட் கட்சியினர் திட்டமிட்டுள்ளார்கள்.

எனினும் எதிரணி வேட்பாளர் களான அதிமுக முருகையா பாண்டியன், திமுக ஆவுடையப்பன் இருவருமே உள்ளூர்க்காரர்கள். அப்பகுதியில் செல்வாக்குடன் வலம் வருபவர்கள். இவர்கள் தரும் போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in