Published : 06 Feb 2022 09:32 AM
Last Updated : 06 Feb 2022 09:32 AM

கடம்பூர் பேரூராட்சியில் போலி கையெழுத்து விவகாரம்- திமுக வேட்பாளர்கள் மூவரின் வேட்புமனு தள்ளுபடி

கடம்பூர் பேரூராட்சியில் போலி கையெழுத்து விவகாரத்தில் திமுக வேட்பாளர்கள் மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்யக்கோரி எதிர்தரப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி

கடம்பூர் பேரூராட்சியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்றுகாலை நடந்தது. 1-வது வார்டில் திமுக சார்பில் ஜெயராஜ், சுயேச்சையாக எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2-வது வார்டில் திமுக சார்பில் சண்முகலட்சுமி, சுயேச்சையாக ராஜேஸ்வரி நாகராஜா, 11 வார்டில் திமுக சார்பில் சின்னதுரை, சுயேச்சையாக சிவக்குமார்வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூன்று வார்டுகளில் இவர்கள் 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

பரிசீலனையின்போது 1, 2 மற்றும் 11-வது வார்டுகளில் திமுகவேட்பாளர்களுக்கு முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியானது என குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் இந்த 3 வார்டுகளுக்கான வேட்புமனு பரிசீலனை நிறுத்தப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில்விசாரணை நடந்தது. விசாரணையில், திமுக வேட்பாளர்களுக்கு முன் மொழிந்தவர்களின் கையெழுத்து போலி எனத் தெரியவந்தது.

ஆனால், 1-வது வார்டு திமுகவேட்பாளர் ஜெயராஜ் வேட்புமனுதள்ளுபடி செய்யப்பட்டதாகவும், 2 மற்றும் 11-வது வார்டுகளில்வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் சுரேஷ்குமார் மாலை 3 மணிக்கு அறிவித்து விட்டு, வேகமாக கிளம்பிச் சென்றுவிட்டார். இதனால் மற்ற வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், 2, 11-வது வார்டுகளிலும் திமுக வேட்பாளர்களின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது என அறிவித்தார்.

இந்நிலையில், மாலை 5 மணிக்கு மீண்டும் அங்கு வந்த தேர்தல்நடத்தும் அலுவலர் சுரேஷ்குமார் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த அலுவலர்கள் அவரை மீட்டுமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 1, 2, 11-வது வார்டுகளில் வேறு வேட்பாளர்கள் இல்லாததால் 1-வது வார்டில் எஸ்.வி.எஸ்.பி. நாகராஜா, 2-வது வார்டில் ராஜேஸ்வரி நாகராஜா, 11-வதுவார்டில் சிவகுமார் ஆகியோர்போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

சதியால் திமுகவினரின் மனு தள்ளுபடி: அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு

கோவில்பட்டியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்து பேசும்போது, “ கூட்டணி கட்சிகள் நிற்கும் அனைத்து வார்டுகளிலும் திமுகவினர் தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “ 55 ஆண்டுகளாக கடம்பூர் பேரூராட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாத நிலை இருந்ததை, திமுக கூட்டணி இன்று முறியடித்துள்ளது. அங்கு 7 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ், மதிமுக ஆகியவை தலா ஒரு வார்டிலும் களத்தில் நிற்கிறோம். இந்த முறை கடம்பூரில் ஜனநாயக முறைப்படிதேர்தல் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு சதி, ஒரு குடும்பத்தின் ஆதிக்கம்மூலம் 1, 2 மற்றும் 11-வது வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மற்ற 9 வார்டுகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x