Published : 06 Feb 2022 09:03 AM
Last Updated : 06 Feb 2022 09:03 AM

கஜகஸ்தானில் சர்வதேச வலு தூக்கும் போட்டி: உதவிக்காக காத்திருக்கும் வேலூர் வீராங்கனை

வலுதூக்கும் வீராங்கனை கவிதா. படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

சாதிப்பதற்கு வறுமை தடை யில்லை என நிரூபித்துள்ள வேலூரைச் சேர்ந்த வலு தூக்கும் வீராங்கனை கஜகஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க பணம் தடையாக மாறியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் ஜெய்பீம் தெரு வில் உள்ள ஒரு வீட்டின் பாதி இடிந்தும், மிச்சமிருக்கும் பகுதி எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது வலு தூக்கும் வீராங்கனை கவிதாவின் வீடு. கல்லூரி, பல்கலைக்கழகம், மாநில அளவில் தேசிய அளவில் என இவர் பெற்ற பதக் கங்கள், சான்றிதழ்களையும் பெருமையுடன் மாட்டி வைக்கக்கூட இடமில்லாத நிலை. 22 வயதான கவிதா, போளூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். கவிதாவின் தந்தை தாஸ், பீடி சுற்றும் தொழிலாளி. தாய் லட்சுமி, வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக தினக் கூலி அடிப்படையில் வேலை செய்து வருகிறார்.

கவிதா நான்கு வயதாக இருக்கும்போதே தந்தை தாஸ் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து விட, குடும்பத்தின் மொத்த பாரமும் லட்சுமியின் சொற்ப வருமானத்தில் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. கல்வி மட்டுமே ஏழ்மை நிலையில் இருப்பவர்களை மேலே உயர்த்தும் என்பதால் கூலிப் பணத்தில் மகளை படிக்க வைத்தார்.

தனது குடும்பத்தை சற்று மேலே உயர்த்தும் வாய்ப்பு விளையாட்டு துறையில் இருப்பதை கவிதா பிளஸ் 1 படிக்கும்போது தெரிந்து கொண்டார். அந்த நேரத்தில், சத்துவாச்சாரி அரசினர் பள்ளி யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கத்தின் பேச்சு, கவிதாவின் வலு தூக்கும் பயிற்சிக்கு ஊக்கமாக இருந்தது.

காகிதப்பட்டறை பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் யுவராஜ் நடத்தி வரும் உடற் பயிற்சி கூடத்தில் சேர்ந்த கவிதா, தனது கடுமையான பயிற்சியால் பல்வேறு நிலைகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பதக் கங்களை குவித்துள்ளார். கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவில் ‘பெஞ்ச் பிரஸ்’ போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற கவிதா, 65 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதன்மூலம், கஜகஸ்தான் நாட்டில் வரும் மே மாதம் நடைபெற உள்ள ‘உலக வலு தூக்கும் சாம்பியன்ஷிப்’ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தேசிய அளவிலான பதக்கம் வாங்கிய கவிதாவுக்கு முதல் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆனால், குடும்பத்தின் ஏழ்மை நிலை ஒரு பக்கம் இருப்பதால் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பணம் தடையாக மாறியுள்ளது.

இதுகுறித்து கவிதா கூறும் போது, ‘‘கஜகஸ்தானில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தகுதி பெற் றுள்ளேன். ஸ்பான்சர் இல்லாமல் செல்ல முடியாது. யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் பதக்கம் பெற்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், இந்த மாவட்டத்துக்கும் பெருமை சேர்ப்பேன்’’ என்றார்.

‘‘இந்த மாதம் 15-ம் தேதிக் குள் ரூ.50 ஆயிரம் பணத்தை கட்டினால்தான் போட்டியில் பங்கேற்க முடியும். சர்வதேச போட்டியில் 70 கிலோ அளவுக்கு ‘பெஞ்ச் பிரஸ்’ பயிற்சி பெற்றுள்ளார். அவர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகமும், தனியார் நிறுவனத்தினரும் உதவி செய்ய முன்வர வேண்டும்’’ என்கிறார் பயிற்சி யாளரும் முன்னாள் ராணுவ வீரருமான யுவராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x