Last Updated : 05 Feb, 2022 07:55 PM

 

Published : 05 Feb 2022 07:55 PM
Last Updated : 05 Feb 2022 07:55 PM

ஹிஜாப், காவித் துண்டு, கர்நாடகா... 'யாருக்கும் அதிகாரமில்லை' - முஸ்லிம் மாணவிகள் போராட்டமும் சில பார்வைகளும்

”ஆடை என்பது எங்களது தனிப்பட்ட உரிமை. எங்களை கழிப்பறைகளைப் பயன்படுத்தக் கூட பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குதான் செல்ல வேண்டியுள்ளது. அவர்களது குழந்தைகளை இந்த விதத்தில்தான் நடத்துவார்களா? நாங்கள் ஆதரவற்றவர்கள்போல் சாலைகளில் அமர்ந்துள்ளோம்”- ஹிஜாப் அணிவதற்கு பள்ளியில் அனுமதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி ஒருவரது குரல் இது..

கர்நாடகாவில் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. பள்ளியைத் தொடர்ந்து, மங்களூருவிலும் இந்து மதம் சார்ந்த அமைப்பினரின் அழுத்தம் காரணமாக அங்குள்ள சில பள்ளிகள் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிஜாப் அணிவது தங்களது உரிமை என பள்ளி வளாகத்துக்கு வெளியே 3 நாட்களுக்கு மேலாக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மாணவிகளின் குரலுக்கு கர்நாடக பாஜக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் இது தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும்வரை, தற்போதுள்ள சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களை கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய இடங்களில் உள்ள அரசு பி.யூ. பள்ளிகளில் ஹிஜாப் போராட்டத்துக்குப் போட்டியாக, காவித் துண்டு அணியும் போராட்டத்தில் மாணவர்கள் சிலர் ஈடுபட்டது அனைத்துத் தரப்பு மாணவர்களிடத்திலும், மக்களிடத்திலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் ஒன்றை நீண்ட காலமாக பின்பற்றுவதற்கும், தூண்டுதலின் பேரில் ஒரு பழக்கத்திற்கு நீங்கள் தள்ளப்படுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடுதான் கர்நாடகவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேறுபாடுகள்தான் வரலாற்றில் பல வன்முறைகளுக்கு காரணமாகியுள்ளன. இவ்வாறான சூழலில் கர்நாடக அரசும், கல்வி நிறுவனங்களும் இந்த விவகாரத்தை முதிர்ச்சியுடன் கையாள்வது அவசியம்' என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சமூகப் பிரச்சினை குறித்த கவனிக்கத்தக்க பார்வைகள்...

சமூக ஆர்வலர் ஓவியா: ”இந்த விவகாரத்தை நாம் கவனமாக ஆராய்ந்தால், இதில் முற்போக்கான முகமூடியை அணிந்துகொண்டு கருத்தியல் வன்முறையை இந்துத்துவ அமைப்புகள் விதைக்கின்றனர் என்பது தெரியும். பள்ளிக் கூடங்களில் மத, சாதிய அடையாளங்களோடு வரக் கூடாது என்பது சரியான கருத்துதான். ஆனால் இதனை ஒரு சமூகத்தின் மீது மட்டும் தேர்வு செய்து திணிக்க முயல்வது தவறு. இந்தக் கருத்து அனைத்து மதத்தினருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரையும் சமப்படுத்துவதாக இருக்க வேண்டும். உண்மையில் இந்துதுத்துவா அமைப்புகள் இங்கு பாகுப்பாட்டைதான் விதைக்கிறார்கள்.

பொதுவாகவே நான் புர்காவுக்கு எதிரானவள். மத அடையாளம் என்றாலும் இஸ்லாமிய பெண்கள் புர்காவிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்றுதான் நான் கூறுகிறேன். ஆனால், அந்த முடிவை இஸ்லாமிய பெண்கள்தான் எடுக்க வேண்டும். நான் எடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் எனது எல்லை என்பது இதில் பிரச்சாரம் செய்யும்வரைதான்; அவர்களிடம் சென்று புர்காவை கழட்டு என்பதற்கான அதிகாரம் நமக்கு கிடையாது. அவர்களாக அந்த புர்காவிலிருந்து வெளியே வர வேண்டும் என்றுதான் நான் பேசுவேனே ஒழிய, சட்டத்தின் மூலமாகவோ வற்புறுத்தியோ இருக்க கூடாது. புர்கா போட்டுக் கொண்டால் மத அடையாளம் தெரிகிறது என்றால், இந்துக்கள் பொட்டு வைத்துக்கொள்வதால் மத அடையாளம் தெரியாதா? இதில் தாலி என்பது சாதி, மதம் என அனைத்தையும் குறிக்கிறது. அவ்வாறு இருக்கையில் இவர்கள் அனைத்தையும்தானே தடை செய்ய வேண்டும். இந்தக் கேள்வியை நிச்சயம் எழுப்ப வேண்டும்.

அவர்கள் புர்கா போட்டால், நாங்கள் காவித் துண்டு அணிவோம் என்று சொல்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன்... யாரோ ஒருவர் சொல்கிறார்கள் என்பதற்காக அப்பெண்கள் புர்கா போடவில்லை. புர்கா போடுவது அவர்கள் மதத்துக்குள்ளாக நிகழ்வது. ஆனால் காவித் துண்டைப் போர்த்திக் கொள்வது என்பது இந்து பெண்களிடம் கிடையாது. துண்டு என்பதே பெண்களுக்கான உடை அல்ல. புர்கா எதிர்ப்புக்காக இவர்கள் துண்டு போடுகிறார்களே தவிர, அது பாரம்பரியமானது அல்ல. ஆனால் இஸ்லாமிய பாரம்பரிய உடையில் புர்கா உள்ளது. எனவே, இரண்டையும் சமப்படுத்தக் கூடாது. இதையும் மீறி அவர்கள் துண்டு போடுவோம் என்று கேட்டால் அவர்களையும் அனுமதியுங்கள். அதைவிட்டு இவர்களை புர்கா போடக் கூடாது என்று சொல்ல கூடாது.

கடந்த 3 ஆண்டுகளாகவே மக்கள் நிறைய இன்னல்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் எவ்வாறு களையப் போகிறோம் என்ற அச்சமிகுந்த சூழலில் உள்ளோம். எந்த வீடுகளுக்குச் சென்றாலும் அங்குள்ள பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு செல்வதற்காகவே படிக்கிறார்கள். இந்த நாடே வேண்டாம் என்று கூறுகிறார்கள். இவ்வாறான சூழலில்தான் நாம் இருக்கிறோம். வரும் தலைமுறையினர் இந்த நாட்டில் வாழ விரும்பாத சூழலில்தான் நாம் இந்த நாட்டை வைத்திருக்கிறோம். அதனைப் பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக இருக்கும் மக்களையும் புண்படுத்திக் கொண்டிருந்தால் யார் இந்த நாட்டில் வாழ்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.”

கவிஞர் சல்மா: ”பெண்களுடைய கல்வி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான அடிப்படையான விஷயம். இது ஒரு சமூக பெண்களுக்கு இத்தனை ஆண்டு காலமாக சாத்தியப்படாமல் இருந்த சூழலில்தான் பெண்கள் கல்வி கற்பிதற்கும், வெளியே செல்வதற்கும் அனுமதிப்படுகிறார்கள். பாஜக ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து எதாவது ஒரு விதத்தில் இஸ்லாமிய சமூகத்தை ஒடுக்குவதற்கான முயற்சியை அவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். உணவு தொடங்கி அவர்கள் மீதான் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. கல்வி என்பது எப்படி அடிப்படையான உரிமையோ, அதேபோல் யார் எந்த மதத்தைப் பின்பற்றுவது அவர்களின் அடிப்படை உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. இத்தனை ஆண்டு காலமாக கல்விக்கு வராத பெண்கள் தற்போது வரத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எது சரியான உடை என்று நினைகிறார்களோ, அதனை அணிந்து வருவதுதான் இத்தனை ஆண்டுகாலம் சாத்தியமாகி உள்ளது. அதனால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு கர்நாடகா மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்துத்துவ அடிப்படைவாதிகள், இஸ்லாமிய சமூகத்தினர் மீது மிக மோசமான வெறுப்பை கட்டமைக்கும் நிலையை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இஸ்லாமிய மாணவிகளின் கல்வியைப் பறிக்கும் நோக்கத்தில் இந்துத்துவா அடிப்படைவாதிகள் செயல்படுகின்றனர். கேராளவிலிருந்து ஐடிடிக்கும் படிக்க வந்த ஃபாத்திமா என்ற இளம்பெண்ணை, அங்கிருந்த இந்துத்துவ பேராசிரியர் தற்கொலைக்குத் தூண்டினார். ஒரு சமூகம் மேலே வந்துவிட கூடாது என்று இந்துதுவா சக்திகள், பாஜக அரசின் துணையோடு நாடு முழுக்க செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

பொட்டு வைப்பது, ஹிஜாப் அணிவது, சிலுவை அணிவது என்பது அவரவர் விருப்பம். ஆனால், இதனை சுட்டிக்காட்டி மாணவர்களை கல்வி நிலையங்களில் மறுப்பது என்பது மிக மோசமான காலத்தை நோக்கி பாஜக அழைத்து செல்வதை காட்டுகிறது. கல்வி மறுக்கப்படுவது மிகக் கடுமையான ஒடுக்குமுறை. இதனைத்தான் அவர்கள் இஸ்லாமிய பெண்கள் மீது நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது கல்வி மறுப்பது என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது, இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கான சதியாகதான் தெரிகிறது. அரசியல் சாசனம் அளித்த உரிமை மறுக்கப்படுவது நிச்சயம் வேதனையான ஒன்று. இங்குள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர்ந்து இப்பெண்களின் கல்விக்காக குரல் கொடுக்க வேண்டும்.”

தன்னார்வலர் ராஸ்மி மஜித் (கடையநல்லூர்): ”நான் இஸ்லாம் பெண்ணாக இருந்தும் ஹிஜாபை நான் அணிவதில்லை. ஹிஜாப் அணிவது சரி என கூறும் சமூகத்தில் ஹிஜாப் சரியல்ல என்ற கூறுவதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது. இம்மாதிரியான விவாதங்கள் சமூகத்துக்குள் இருக்கும்போது ஆரோக்கியமானது. ஆனால், ஹிஜாப்பை அடிமைக் குறியீடு என்று மற்ற மதங்கள் அணுகுவது முற்றிலும் தவறானது. இதனை அந்த சமூகத்துக்குள்ளான மக்கள்தான் ஆலோசிக்க வேண்டும். ஆனால், இதனை இன்னொரு மதத்தின் அளவுகோலிருந்து வைத்து பார்ப்பது வன்முறைக்குத்தான் இட்டுச் செல்லும்.

ஆடை மட்டும் இல்லாமல், பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும் நிறைய விஷயங்கள் இங்கு உள்ளன. ஆடை மட்டுமே அடக்குமுறை அல்ல. மாதவிடாய்க் காலங்களில் எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் எங்கள் சமூகத்தில் விதிப்பதில்லை. ஆனால் பிற மதங்களில் உள்ளது. இதை வைத்து மற்ற மதங்களில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்று நாங்கள் கூற முடியுமா? எனவே ஒரு மதம் சார்ந்த நம்பிக்கை மற்றொரு மதத்திலிருந்து பார்க்கக் கூடாது என்பதுதான் என் பார்வை” என்றார் அவர்.

"இந்திய அரசியலைப்பு சட்டப் பிரிவு 25-ன் படி, ஒருவர் தனது மத நம்பிக்கைகளை சுதந்திரமாக பின்பற்ற முழு உரிமையும் உண்டு. ஆனால், இதற்கு மாறாக கடந்த சில ஆண்டுகளாகவே மதத்தின் அடிப்படையிலான பிரிவினைகளும், சிறுபான்மை சமூகத்தினர் மீதான தேவையற்ற வெறுப்புகளும் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வழிபாட்டுத் தளங்கள் தொடங்கி தற்போது கல்வி நிலையங்களை நோக்கி அந்த வெறுப்பு நகர்ந்திருக்கிறது.அதற்குச் சான்றுதான் போராடும் முஸ்லிம் மாணவிகளுடன், பிற மதங்களைச் சேர்ந்த மாணவிகள் உடன் நிற்காதது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறான சூழலில் நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவது அவசியம்" என்று சமூக ஆர்வலர்கள் பகிர்கின்றனர்.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x