பாலாற்றில் கலக்கும் தோல் ரசாயனக் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்

பாலாற்றில் கலக்கும் தோல் ரசாயனக் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்
Updated on
1 min read

தோல் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுநீர் இரவு நேரங்களில் கால்வாய் மூலம் பாலாற்றில் கலக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் மாசடைந்து பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

வேலூர் மாவட்டத்தில், ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் பேரணாம்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதில், ராணிப்பேட்டை அடுத்த சிப்காட், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தோல் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.

இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகேயுள்ள விவசாய நிலங்களிலும், பாலாற்றிலும் கலப்பதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதை தொழிற்சாலை நிர்வாகம் மறுத்தாலும், அதற்கான ஆதாரங்களை பொதுமக்களே முன்வைத்து வருகின்றனர்.

இது குறித்து ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

ஆம்பூர் அடுத்த ஏ-கஸ்பா பகுதி யைச் சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகேயுள்ள மயானப் பகுதி வழியாக செங்குந்தர் காரிய மண்டபம் எதிரேயுள்ள கால்வாயில் இரவு நேரங்களில் கலக்கப்படுகிறது.

கால்வாய் மூலம் செல்லும் ரசாயனம் கலந்த கழிவுநீர், காமராஜ்நகர், ஏ-கஸ்பா, சோமலாபுரம், சிவராஜ்புரம் வழியாக சென்று பாலாற்றில் கலக்கிறது. இந்த இடைப்பட்ட தூரத்தில் பயணிக்கும் கழிவுநீர் நிலத்தடி நீரில் ஊறி குடிநீர் குழாயில் கலக்கிறது.

இதனால் ஆம்பூர் ஏ-கஸ்பா, காமராஜ்நகர் போன்ற பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர்த் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நீரை குடிக்கும் மக்கள் சிறுநீரக கோளாறு, கண் பார்வை குறைபாடு, கை,கால் வீக்கம், தோல் வியாதி உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.

இது குறித்து, ஆம்பூர் நகராட்சி அலுவலகத்திலும், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுச்சூழல் அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கழிவுநீர் கால்வாயில் கலப்பதை தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இது தொடர்பாக இதுவரை புகார் ஏதும் வரவில்லை. இருப்பினும் விரைவில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக்கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in