Published : 05 Feb 2022 05:25 PM
Last Updated : 05 Feb 2022 05:25 PM
சென்னை: "சமூக நீதி என்ற பெயரில் செய்து வந்த, செய்து கொண்டிருக்கிற மலிவு அரசியலை கைவிட்டு, மக்கள் நலனில் உண்மையான அக்கறையோடு செயல்படுங்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக பாஜக கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதியை நிலைநாட்ட, மேம்படுத்த, நாம் எந்த நம்பிக்கையோடும், நோக்கத்தோடு மண்டல் ஆணையத்தை நிறுவினோமோ அதே நோக்கத்தோடு இணைய வேண்டும் என்று சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பு என்ற அமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் உள்ளிட்ட 37 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
மண்டல் ஆணையத்திற்கு எதிராக, இடஒதுக்கீட்டிற்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு, இந்த நாட்டையே பிளந்து சுடுகாடாக்கிட துடித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சமூக நீதி கூட்டமைப்புக்காக கடிதம் எழுதியுள்ளீர்களே, இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு திமுக இழைக்கும் அநீதி இல்லையா ஸ்டாலின் அவர்களே?
நீங்கள் கடிதம் எழுதியுள்ள 37 தலைவர்களில் பெரும்பான்மையானோர் முன்னர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள்தான். அவர்களை கூட்டமைப்புக்கு அழைப்பது சமூக நீதிக்கு நீங்கள் இழைக்கும் துரோகம் என்று உணரவில்லையா ஸ்டாலின் அவர்களே?
இனியாவது சமூக நீதி என்ற பெயரில் செய்து வந்த, செய்து கொண்டிருக்கிற மலிவு அரசியலை கைவிட்டு மக்கள் நலனில் உண்மையான அக்கறையோடு செயல்படுவீர்களா? உண்மையிலேயே சமூக நீதியின் மீது அக்கறையிருந்தால் காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை மக்களிடம் தெரிவிப்பீர்களா ஸ்டாலின் அவர்களே?” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT