

உதகை: பொது கலந்தாய்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, நீலகிரி மாவட்டம் உதகையில் மலையாளம் மொழி வழி கல்வி கற்ற ஆசிரியர்கள், கலந்தாய்வு நடைபெற்ற பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை மியாஞ்சிபேட்டில் உள்ள நகராட்சி பள்ளியில் ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டிய கேரள மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளியில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ஜெயசீலன் கூறியது: "கூடலூர் கல்வி மாவட்டத்தில் கூடலூர் ஒன்றாம் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு ஆங்கில ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த இடத்துக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாஜிதா பேகம், இடைநிலை ஆசிரியர்கள் சுரேஷ்குமார் மற்றும் சாஜகான் ஆகியோர் தகுதி வாய்ந்தவர்கள். சீனியாரிட்டி அடிப்படையில் இவர்களில் ஒருவருக்கு பணியிடம் வழங்க வேண்டும்.
இதற்காக இன்று உதகையில் நடந்த கலந்தாய்வுக்கு மூவரும் வந்தனர். ஆனால், கலந்தாய்வில் அவர்கள் மலையாள மொழி வழியாக பணி பெற்றவர்கள் என்று கூறி, கலந்தாய்வுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அழைக்கவே இல்லை. மேலும், ஆங்கில ஆசிரியர் பதவிக்கு மலையாளமோ, தமிழ் வழியில் படித்தவர்களையோ யாரையும் பணியமர்த்தலாம். மாறாக மலையாளம் மொழி கல்வி கற்ற ஆசிரியர்களை புறக்கணிக்கின்றனர். இது தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார். ஜெயசீலன்
இதனிடையே, ஆசிரியர்கள் போராட்டம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசருதீன் கூறும்போது, "ஆங்கில ஆசிரியர் பணியிடம் என்றாலும், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க தமிழ் ஆசிரியர் தெரிந்திருப்பது சவுகரியமாக இருக்கும். எனவே, தமிழ் படித்தவர்கள் தமிழ் பள்ளிக்கும், மலையாளம் படித்தவர்கள் மலையாள பள்ளிக்கும் செல்லலாம்" என்றார்.