Published : 30 Apr 2016 08:59 AM
Last Updated : 30 Apr 2016 08:59 AM

கூட்டணியை ஏன் தேடி போகவில்லை?- அன்புமணி பதில்

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக, அதிமுகவினர் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனக் கருதி பிரச்சாரத்தில் பொய்களை சொல்லி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் 185 முறை 700 திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்தார். இத்திட்டங்களுக்கு ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால், வெறும் ரூ.750 கோடி தான் ஒதுக்கினார். ஆனால், அத்தனையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கரும்பு உற்பத்தி 475 லட்சம் டன்னாக இருந்தது. 2011-ம் ஆண்டு ஆயிரம் லட்சம் டன்னாக கரும்பு உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், தற்போது 274 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது தோல்வி பயத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மதுவிலக்கை அறிவித்துள்ளன. இரண்டு கட்சிகளுமே தேர்தலுக் காக மதுவிலக்கில் வேடம் போடுகின்றன.

திமுக, அதிமுக ஆட்சிகளில் மணல், தாதுமணல், கிரானைட் கற்களை வெட்டி எடுக்க ஒரே ஒப்பந்ததாரர்களுக்குதான் அனுமதி கொடுக்கின்றனர். இதில் இருந்து மணல், தாதுமணல், கிரானைட் முறைகேடுகளில் இவர்கள் கூட்டு கொள்ளையடிப்பது தெரிகிறது.

தேர்தல் கருத்து கணிப்புகள், கருத்து திணிப்புகளாகதான் இருக்கிறது. இந்த முறை அதிமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும். தேர்தல் அதிகாரிகள் 70 சதவீதம் ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளனர்.

மக்கள் ஆதரவு இருப்பதால் நாங்கள் கூட்டணியை தேடி போகவில்லை. நாங்கள் அறிவித்த மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி, மதுவிலக்கு அறிவிப்பு, தடுப்பணைகள் திட்டம் உள்ளிட்ட 70 சதவீதம் அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x