Published : 05 Feb 2022 06:51 AM
Last Updated : 05 Feb 2022 06:51 AM
சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2017-ம் ஆண்டுமுதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவர்ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் வகையில், அவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்து, கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவை முதல்கூட்டத்திலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு செப்.13-ம் தேதிசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போதிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து, நீட் தேர்வு குறித்த மனுவை அளித்தது. அதற்குப் பிறகும், நீட் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்தது.
இந்நிலையில், பிப்.1-ம் தேதி,நீட் மசோதாவை தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு காரணங்களையும் குறிப்பிட்டு, அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் 3-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, சட்டப்பேரவை அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் பிப்.5-ம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் முன்வைக்க வேண்டிய தகவல்கள் மற்றும் அடுத்த கட்டமாக மீண்டும் ஒருமசோதாவை தாக்கல் செய்து அனுப்புவது குறித்து, சட்ட வல்லுநர்களுடன் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
அடுத்த வாரத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, அன்று நீட் தொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆளுநர் டெல்லி பயணம்?
இந்த சூழலில், ஆளுநர்ஆர்.என்.ரவி, வரும் 7-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாகவும், 3 நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் அவர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT