கோவை: வேட்பு மனு தாக்கலுக்கு பல்வேறு வேடங்களில் வந்த வேட்பாளர்கள்
வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் அதிகளவில் திரண்டனர். ராஜா, பாரத மாதா உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்து வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியி டும் வேட்பாளர்கள் 5 மண்டல அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை 350 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், மனு தாக்கல் செய்வதற்கு நேற்று இறுதி நாள் என்பதால், காலை முதலே வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சியினர், சுயேச்சைகள் திரண்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் உடன் வந்ததால், மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களை ஒட்டியுள்ள பகுதிகள், கடைகள், தெருக்களில் கட்சியினர் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
வேட்பாளர்களுக்கு டோக்கன் கள் வழங்கப்பட்டன. அனைவரும் டோக்கன்களுடன் வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கான எண் வந்ததும், உள்ளே சென்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலரி டம் மனு தாக்கல் செய்து விட்டு சென்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களில் பலர் பிறரது கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்தனர். குறிப்பாக, 19-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அமுதகுமாரி (40) பாரத மாதா வேடமணிந்து வந்து மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
94-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் சுந்தராபுரத்தை சேர்ந்த நூர் முகமது, ராஜா வேடம் அணிந்து வந்து குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.
95-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் போத்தனூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அண்ணா போன்று வேடமணிந்த கலைஞர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 64-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் டி.ஆர்.கோமதி, தாமரை மலர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தார்.
திமுகவினர் சாலை மறியல்
திமுக கூட்டணியில் 85-வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனைக் கண்டித்து குனியமுத்தூர் பகுதியில் திமுவினர் நேற்றுசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. 7-ம் தேதி பிற்பகலுக்கு பிறகு சின்னம் ஒதுக்கீடு, அதையடுத்து இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
