Published : 05 Feb 2022 08:27 AM
Last Updated : 05 Feb 2022 08:27 AM
சென்னை: தமிழக மின் வாரியத்தில் 56 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து, 600 உதவிப் பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள் (கணக்கு), 1,300 கணக்கீட்டாளர் என மொத்தம் 2,400 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2020 ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பதவிகளுக்கு மொத்தம் 1.03 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.500 தேர்வுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கரோனா ஊரடங்கால் தேர்வு நடத்தப்படவில்லை.
2021-ம் ஆண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த ஆண்டு மே மாதம் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. எனினும், சட்டப்பேரவை தேர்தல் காரணமாக தேர்வு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனால், ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா அல்லது அந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, புதிதாக அறிவிப்பு வெளியிடப்படுமா என்று தேர்வர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "மின் வாரியத்தில் இனி டிஎன்பிஎஸ்சி மூலம்தான் ஆட்கள் தேர்வு நடைபெறும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT