

சென்னை: ஜெம் மருத்துவமனையில் ‘புற்றுநோய் எக்ஸ்போ 2022’ நேற்று தொடங்கப்பட்டது. Vayiru360.com என்ற ஒரு தனித்துவமான உரையாடும் மெய்நிகர் தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது. குடல் புற்றுநோயிலிருந்து மீண்ட கீதா இதைத் தொடங்கி வைத்தார்.
ஒவ்வோர் ஆண்டும் பிப்.4-ம் தேதி உலக புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. “பராமரிப்பு இடைவெளியை மூடு” என்பது அடுத்த 3 ஆண்டுகளுக்கான (2022-24) கருவாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த பிரச்சாரத்தின் முதலாண்டு, உலகம் முழுவதும் புற்றுநோய் சிகிச்சையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்துகொள்வது மற்றும் அங்கீகரிப்பது பற்றியது ஆகும்.
ஜெம் மருத்துவமனை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஸ்கிரீனிங்கின் முக்கியத்துவம் குறித்து, ஒரு மெய்நிகர் விழிப்புணர்வு முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இதற்காக, Vayiru360.com என்ற பெயரில் வயிற்றுப் புற்றுநோய் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பதில்களைக் கண்டறியும் பிரத்தியேக உரையாடும் மெய்நிகர் தளம் தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் பல்வேறு உதவி மற்றும் நிபுணர் குழுவின் வழிகாட்டுதலை வழங்கும். புற்று நோயாளிகள் நம்பிக்கையுடன் சிகிச்சையை மேற்கொள்வதற்கான பயத்தைப் போக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
புற்றுநோயிலிருந்து குணமடைந்தவர்கள் அதுகுறித்து வீடியோ அல்லது பதிவை வழங்கலாம். அது ஜெம் மருத்துவமனையின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்படும். சிறந்த ஊக்கமளிக்கும் பதிவுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு நோயாளிக்கும் உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதும், சிகிச்சையை மேற்கொள்ள போதுமான நம்பிக்கையை வழங்குவதுமே இதன் நோக்கம்.
ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சி.பழனிவேலு கூறும்போது, “பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆரம்பத்தில் தோன்றும் அறிகுறிகள் புறக்கணிக்கப்பட்டு, மிகவும் முற்றிய நிலையில் மட்டுமே புற்றுநோய் கண்டறியப்படுகிறது. புதிய Vayiru360.com இதை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெற உதவும்.
புற்றுநோய்க்கான சிகிச்சைகள் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி மட்டுமே என்று பொது மக்களிடையே தவறான கருத்து உள்ளது. புற்றுநோய்களில் பலவற்றுக்கு அறுவை சிகிச்சையே முதன்மை சிகிச்சையாக இருக்கும். ஆரம்பக்கால புற்றுநோய்களை ரோபோடிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் குணப்படுத்த முடியும். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஸ்கிரீனிங் சிறந்த வழியாகும்” என்றார்.
சென்னை ஜெம் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ்.அசோகன், ஜெம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பி.செந்தில்நாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.