

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சித் தேர்தலில் போட்டியிட திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர் என இருவர் தங்களின் அரசுப் பணிகளை ராஜினாமா செய்துவிட்டு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு, பல அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய குவிந்தனர்.
அவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் ஒருவர், திருவேற்காடு நகராட்சியின் 8-வது வார்டு திமுக வேட்பாளர் இ.கிருஷ்ணமூர்த்தி. திமுகவின் திருவேற்காடு நகர செயலாளரான இவர் மத்திய அரசின் ரயில்வே துறையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பணியை ராஜினாமா செய்து விட்டு வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல், திருவேற்காடு நகராட்சியில் 1-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சந்திரலேகா, பெண் போலீஸ் கமாண்டோ பிரிவில் பணிபுரிந்து, சமீபகாலமாக திருவேற்காடு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரும், தன் பணியை ராஜினாமா செய்து விட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.