Published : 05 Feb 2022 08:49 AM
Last Updated : 05 Feb 2022 08:49 AM
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய்யை நேற்று திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று ரங்கசாமி குறிப்பிட்டார்.
சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை சென்று, அவரை சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளார். முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று குறிப்பிடுகிறார்.
‘ஒரு மணி நேரம் வரை பேசினீர்களே!’ என்று கேட்டதற்கு, "இயல்பான வழக்கமான சந்திப்புதான். நல்ல நண்பர். வழக்கமாக பேசுவேன். வேறொன்றுமில்லை" என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. தேர்தலின்போது இந்த இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்த அமைப்பின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் (புதுச்சேரியைச் சேர்ந்தவர்) அனுமதி தந்தார். அத்துடன் முதல்வர் ரங்கசாமி - நடிகர் விஜய் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவரும் இவர்தான் என்றும் குறிப்பிடுகின்றனர்.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தேர்தலில் வென்று கூட்டணி அரசு அமைந்தாலும் டெல்லி சென்று பிரதமர் மோடியை இதுவரை முதல்வர் ரங்கசாமி சந்திக்கவே இல்லை. பாஜக எம்எல்ஏக்கள் தற்போது வாரியத்தலைவர் பதவி தர முதல்வர் ரங்கசாமியிடம் கோரினர். தற்போது நஷ்டத்தில் இருப்பதால் வாரியத்தலைவர் பதவியை தர ரங்கசாமி மறுத்துவிட்டதால் இருதரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அ த்துடன் மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கான நிதியுதவியும் கடந்த ஆண்டை போலவே இம்முறை மத்திய பாஜக அரசு உயர்த்தி தராததும் ரங்கசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
தற்போது தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. தற்போது புதுச்சேரியிலும் உள்ளாட்சித்தேர்தல் வர வாய்ப்புள்ளது. அத்துடன் பாஜகவுடன் மோதல் போக்கு இருப்பதால் தமிழகத்தில் இக்கூட்டணியில் எடுத்த முடிவையே புதுச்சேரியிலும் ரங்கசாமி எடுக்க வாய்ப்பு உள்ளது.
அதன் முன்னோட்டமாகவே நடிகர் விஜய்யை சந்தித்திருக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT