

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், வரண்டாக்களில் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பல பள்ளிகளில் மாணவர்களின் வகுப்பறைகளில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் வராண்டாக்களில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
மக்களின் உணவு உரிமையை பறித்து, ரேஷன் கடைகளை ஒழிக்க அரசு முடிவெடுத்ததன் விளைவாக அவசர காலத்தில் ரேஷன் பொருட்கள் பள்ளிகளில் வைக்கப்பட்டன. தற்போது, கரோனா ஊரடங்கு தளர்வால் வாரத்தில் 6 நாட்களும் முழு வேளை நாட்களாக பள்ளிகள் செயல்பட தொடங்கியிருக்கின்றன.
இந்த நிலையில் வகுப் பறைகளில் வைக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்களை அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்காதது அரசு மற்றும் அரசுத்துறை உயர்மட்ட அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையின் வெளிபாடாகும்.
3 லட்சம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் ரேஷன் கடைகளுக்கு வாடகை அளிக்க மறுக்கும் புதுசேரி அரசு, ஊதாரித்தனமாக சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ரூ.7.5 லட்சம் என 2.5 கோடி ரூபாயில் ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த கைபேசி, மடிகணினி போன்ற பொருட்களை வழங்கியுள்ளது.
ஆனால், பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்யவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் சூழலில் தடவாள வசதிகளை தற்காலிமாகவாது ஏற்படுத்தியிருக்க வேண்டும். கல்வித்துறை மற்றும் அரசின் செயல்பாடு அரசு பள்ளிகளை மட்டுமே நம்பியுள்ள ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களை அலைக்கழிக்க வைக்கிறது.
தற்போதுள்ள சூழலில், நடப்பாண்டில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும். மேலும் மாணவர் நலன் கருதி தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியாக கல்வி கற்க தடையாக உள்ள வகுப்பறைகளில் அடுக்கி வைக்கப்பட்ட அரிசி மூட்டைகளை அப்புறப்படுத்தி, சிறந்த கற்றலுக்கான சுழலை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.