

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் கடைசி நாளான நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதனால் தேர்தல் அலுவலகங்களான நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
குறிப்பாக திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்தே வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று காலை 10 முதல் 10.30 மணி வரை ஒரு சிலர் மட்டுமே மனு தாக்கல் செய்தனர்.
காலை 10.30 முதல் 12 வரை ராகு காலம் என்பதால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதன் பின் பகல் 12.30 மணியிலிருந்து நல்ல நேரத்தில் ஏராளமான அதிமுக, திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்த கட்சியினரால் நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.