எங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள்: அம்பத்தூரில் விஜயகாந்த் பேச்சு

எங்கள் பக்கம் மக்கள் இருக்கிறார்கள்: அம்பத்தூரில் விஜயகாந்த் பேச்சு
Updated on
1 min read

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி சார்பில் அம்பத்தூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

காஞ்சிபுரத்தில் நடந்த மாநாட்டில் ‘கிங்’காக இருக்க வேண்டுமா? ‘கிங் மேக்கராக’ இருக்க வேண்டுமா? என்று கேட்டதற்கு நீங்கள் தான் ‘கிங்’க்காக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். நாளை நான் முதல் அமைச்சரானால், நீங்களும் முதல் அமைச்சர்தான்.

எங்கள் கூட்டணியில் உள்ள 6 கட்சிகளின் தலைவர்களும் ஒற்றுமையாக உள்ளோம். நான் தவறு செய்தால், எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற 5 தலைவர்களும் அதனை திருத்துவார்கள். திமுக, அதிமுகவினர் இளைஞர்களை கிண்டல் செய்கின்றனர். வரும் தேர்தலில் அந்த இளைஞர்கள் போடபோகிற ஓட்டுதான், உங்களுக்கு வைக்கப்படும் வேட்டு. விவசாயிகளும், நெசவாளர்களும் எனது இரு கண்கள். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியம். அந்த விவசாயிகளின் பக்கம்தான் விஜயகாந்தும், எங்கள் கூட்டணி தலைவர்களும். மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் தமிழக அரசு, கிரானைட் முறைகேடு வழக்கில் மட்டும் மேல்முறையீடு செய்யாதது ஏன்?

கட்சி மாறியவர்களை வருத்தப்பட வைக்க வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. நாட்டுக்கு நல்லது நடக்கவேண்டும். அந்த நல்லது நடக்க, சட்டப்பேரவை தேர்தலில் நல்லவர்கள் நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கும், எங்களுக்கும் இடையே யுத்தம் நடக்கிறது. இந்த யுத்தம் அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையே நடக்கிறது. தர்மத்தின் பக்கம் உள்ள எங்கள் பக்கம் மக்கள் உள்ளனர். ஆகவே, தேர்தல் யுத்தத்தில், அவர்கள் தோற்பார்கள் என்று விஜயகாந்த பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in