

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 மாவட்டச் செயலாளர்களில் 3 பேருக்கு ‘சீட்’ ஒதுக்கவில்லை திமுக. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, அவரது குடும்பத்தினருக்கும் ‘சீட்’ இல்லை. இந்த நிலையில், கோவை திமுக வேட்பாளர்கள் போட்டியில் நீந்திக் கடந்து வெற்றிக் கனியை பறிப்பார்களா என்ற கேள்வி அக் கட்சிக்குள் எழுந்துள்ளது.
கோவையில் தொடர்ந்து அதிமுக 10 ஆண்டுகளாக வென்றுவருவது திமுக தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கோவை மாவட்டத்தை 4 மாவட்டங்களாக பிரித்தது கட்சித் தலைமை. வீரகோபால் (கோவை மாநகர் வடக்கு), நாச்சிமுத்து (கோவை மாநகர் தெற்கு), தமிழ்மணி (கோவை புறநகர் தெற்கு), சி.ஆர்.ராமச்சந்திரன் (கோவை புறநகர் வடக்கு) ஆகியோரை மாவட்டச் செயலாளர்களாக நியமித்தது. பொங்கலூராரை சேலம் மாவட்ட கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு பொங்கலூரார் விண்ணப்பிக்கவில்லை. ஆனால், அவரது மகன் பைந்தமிழ் பாரி, மருமகன் டாக்டர் கோகுல் ஆகியோரும், 4 மாவட்டச் செயலாளர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
திமுகவை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்களுக்கு அளிக்காமல் மற்றவர்களுக்கு ‘சீட்’ அளிப்பதை நடைமுறையாக கொண்டதில்லை என்பதால் மா.செக்கள் தங்களுக்கு கண்டிப்பாக ‘சீட்’ கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
முன்னாள் அமைச்சர், கட்சி உயர்மட்டக் குழு பொறுப்பில் உள்ளவர் என்ற முறையில் பொங்கலூர் பழனிச்சாமியின் குடும்பத்தில் ஒருவருக்காவது ‘சீட்’ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தவிர்த்து மீதி மா.செக்கள், பொங்கலூராரின் வாரிசுகளில் யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை.
கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலர் வீரகோபால், முன்பு பல முறை மாநகரச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். கோவை புறநகர் வடக்கு மா.செவான சி.ஆர்.ராமச்சந்திரன் முன்னாள் எம்எல்ஏவும் கூட. இவர்களுக்கு ‘சீட்’ தராமல் கோவை வடக்கில் மீனா லோகு (கவுன்சிலர் மற்றும் மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர்), கவுண்டம்பாளையத்தில் பையாக்கவுண்டர், சிங்காநல்லூரில் ந. கார்த்திக் (முன்னாள் துணை மேயர்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை தந்துள்ளது என்கின்றனர் கட்சியினர்.
இதுகுறித்து கட்சியினர் சிலர் கூறும்போது, ‘கோவை மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களில் இல்லாத விதமாக இதுவரை பதவியில் இருந்தவர்களையும், கட்சி முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களையும் புறக்கணித்து வேட்பாளர் பட்டியல் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே கட்சி பலகீனமாக உள்ள மாவட்டமான இங்கு, கோஷ்டி அரசியலுக்கும் பஞ்சமில்லை. இந்த நிலையில் 3 மாவட்டச் செயலாளர்களையும் முன்னாள் விஐபி-க்களையும் உதறித் தள்ளிவிட்டு வேட்பாளர்கள் அறிவித்திருப்பதன் மூலம் தேர்தல் பணிகளில் பெரும் சுணக்கத்தையும், உள்ளடி வேலைகளையும் உருவாக்கும். இதில் வேட்பாளர்கள் நீந்திக்கடப்பது பெரும் சவாலாகவே இருக்கும்’ என்றனர்.
இதுகுறித்து பொங்கலூர் பழனிச்சாமி கூறும்போது, ‘எனக்கோ, மற்றவர்களுக்கோ நான் கட்சித் தலைமையில் ‘சீட்’ கேட்கவில்லை. புதியவர்கள் வரட்டும், தொண்டாற்றுவோம் என்றுதான் முன்பே சொல்லியிருக்கிறேன், அதுதான் நடந்துள்ளது. இதில் எனக்கு துளியும் வருத்தமில்லை’ என்றார்.
கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் வீரகோபால் கூறும்போது,
‘நான் ‘சீட்’ கேட்டிருந்த தொகு தியை, பெண் வேட்பாளருக்கு கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை, வழக்கம் போல் கட்சிப் பணியாற்றுவேன்’ என்றார்.