Published : 16 Apr 2016 09:11 AM
Last Updated : 16 Apr 2016 09:11 AM

அன்பாக கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் உண்மையைத்தான் சொல்வேன்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதி

அன்பாக கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் நான் உண்மையைத்தான் சொல்வேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

திருத்தணி தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருத்தணி ரயில் நிலையம் அருகே நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:

நாங்கள் 6 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். நாங்கள் வெல்வது நிச்சயம். நான் பகலில் கூட்டம் நடத்தி வெயில் கொடுமையில் யாரையும் சாக விடமாட்டேன். அதனால்தான் மாலை நேரத்தில் கூட்டம் போடுகிறோம். அதிமுகவினர் காசு கொடுத்து கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வருகின்றனர். நாங்கள் யாரையும் காசு கொடுத்து அழைத்து வரவில்லை. இது தானாக வந்த கூட்டம்.

அதிமுகவினருக்கு ஜெயலலிதாவை குளிர்விக்க வேண்டும். திமுகவினருக்கு கருணாநிதியையும், ஸ்டாலினையும் குளிர்விக்க வேண்டும். அவர்களுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை. முடியட்டும், விடியட்டும் என கூறி பிரச் சாரம் செய்து வருகின்றனர். அது அவர் களுக்கே தீங்காக முடியப் போகிறது.

அண்ணாசாலையில் இருந்த சிலையை ஏன் அகற்றினார்கள்? கருணாநிதி ஏன் மஞ்சள் துண்டு போட்டுள்ளார்? கேட்டால் எனக்கு சடங்கு, சம்பிரதாயம் மீது நம்பிக்கை இல்லை என்பார். பாட்டாளி மக்கள் கட்சியுடன் நட்பு வைத்திருப்பதால் மஞ்சள் துண்டு அணிந்திருப்பதாக கூறினார். இப்போதுதான் பாமகவுடன் நட்பு இல்லையே மஞ்சள் துண்டை கழற்ற வேண்டியதுதானே.

அன்பாக கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் நான் உண்மையைத்தான் சொல்வேன். இந்த தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணமூர்த்திக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் தோழமை கட்சியினர் அனைவருக்கும் மறக்காமல் நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் பன்னீர் செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.கண்ணன், தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி, தமாகா முன்னாள் எம்எல்ஏ ராமன், உள்ளிட்ட தோழமை கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திலும் விஜயகாந்த் பேசினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x