

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவ புரட்டாசி பட்டத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய், பருத்தி, வெள்ளைச்சோளம், கொத்தமல்லி, கொண்டைக் கடலை பயிரிடப்பட்டது. கடந்தாண்டை போல் இந்தாண்டும் தொடர்ந்து பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. ராபி பருவத்தின் கடைசி கட்டமாக விவசாயிகள் கொத்தமல்லி, சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். கொத்தமல்லி பயிருக்கு ஊடுபயிராக நாட்டு கொண்டைக் கடலை பயிரிட்டுள் ளனர். வழக்கமாக கார்த்திகை முதல் வாரத்துக்குள் கொத்தமல்லி விதைப்பு நடைபெற்று முடிந்து விடும். ஆனால், இந்தாண்டு கார்த்திகை மாதம் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்ததால், விவசாயிகளால் சரியான நேரத்துக்கு விதைப்பு செய்ய முடிய வில்லை. மார்கழி மாதத்தில் தான் விதைப்பு செய்தனர். தற்போது வெயில் அதிகளவு உள்ளதால், நிலத்தில் ஈரப்பதம் இல்லாமல் கொத்தமல்லி செடிகள் வாடி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “கோவில்பட்டி கோட்டத்தில் பயிரிடும் கொத்தமல்லி மற்றும் கொண்டைக் கடலை செடிகள் நாட்டு ரகங்களைச் சேர்ந்தவை என்பதால், நறுமணம் மற்றும் சுவை அதிகம். ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் விளையக்கூடிய கொத்தமல்லியை லயன் மல்லி என்று கூறுவார்கள். காண்பதற்கு பொன் நிறத்தில் இருக்கும். ஆனால், அதில் சுவை இருக்காது. கொத்தமல்லி தூத்துக்குடி மாவட்டம் புதூர், விளாத்திகுளம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளில் அதிகம் பயிரிடுவார்கள். கொத்தமல்லி செடிகள் சுத்த கரிசல் மண்ணில் மட்டுமே விளையக்கூடியது. இந்தாண்டு கோவில்பட்டி கோட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கொத்தமல்லி பயிரிடப்பட்டுள்ளது. கொத்தமல்லி செடி வளர அதிக மழை தேவை இல்லாவிட்டாலும், ஓரளவு ஈரப்பதமாவது நிலத்தில் இருக்க வேண்டும்.
செடிகள் முளைத்து 25 நாட்களான நிலையில் தற்போது வெயில் அதிகம் என்பதால் கொத்தமல்லி செடிகள் வாடுகி ன்றன. எனவே, கொத்தமல்லி சாகுபடியாளர் களுக்கு அரசு தோட்டக்கலைத் துறை சார்பில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்” என்றார்.