

திருவண்ணாமலை அருகே சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆட்சியர் பா.முருகேஷுக்கு 424 பேர் மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த பாலியப்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிப்காட் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் சிப்காட் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத் தியதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (வாரிசுகள்) அரசு சார்பில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா?, சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் நீர் ஆதாரம் எவ்வகையில் கிடைக்கிறது?, தொழிற்பேட்டை பகுதியில் காற்று மாசு அளவு எவ்வளவு உள்ளது?, உள்ளூர் கிராம மக்களுக்கு அரசு மற்றும் சிப்காட் நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு விவரங்கள்? மற்றும் சிப்காட் அமைவதால் விவசாயம் பாதிக்கப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து” பல்வேறு கேள்விகள் எழுப்பி பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேபோல், புனல்காடு கிராம மக்கள், “தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு வெளி பகுதியில், எத்தனை நகராட்சிகளில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது?, எந்தெந்த நகராட்சியில் தொழில்நுட்ப முறையில் குப்பைக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கிராம பகுதியில் கொட்டி கிடங்கு அமைக்க அரசாணை உள்ளதா?” உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டு பதில் கேட்கப்பட்டுள்ளன. கிராம மக்களிடம் இருந்து மனுக்களை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் பெற்று கொண்டார். அப்போது அவர், மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
பெரிய பாலியப்பட்டு, சின்ன பாலியப்பட்டு, பெரியகோளாபாடி, சின்ன கோளாபாடி, வேடியப்பனூர், தேவனந்தல், வாணியம்பாடி நகர், செல்வபுரம் நகர், மாரியம்மன் நகர், அண்ணா நகர் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், சிப்காட் நிறுவனம் நிலம் கையகப்படுத்த உள்ளதை எதிர்த்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 424 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் தெரிவித்துள்ளார்.