Published : 05 Feb 2022 10:23 AM
Last Updated : 05 Feb 2022 10:23 AM
ஜோலார்பேட்டை அருகே மகன் உயிரிழந்த தகவலறிந்தவுடன் அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அடுத்த பக்ரிதக்கா முனியன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெரிய தம்பி (95). இவரது மனைவி ஜானகி (90), இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பெரியதம்பி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, ஜானகி தனது மகன்கள், மகள்களை பெரும் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். அனைவருக்கும் திருமணம் நடந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் கண்ணன் (55) விவசாயம் செய்து வந்தார். மூத்த மகன் கண்ணன் மீது அதிக பாசம் கொண்டு ஜானகி அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், விவசாயி கண்ணனுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி கண்ணன் உடல் நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கண்ணன் உயிரிழந்தார். இந்த தகவல் அவரது குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தாய் ஜானகிக்கு மகன் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டதும், ஜானகி கதறிஅழுது மயங்கி விழுந்து அதிர்ச்சியில் அவரும் உயிரிழந்தார்.
மகன் உயிரிழந்த தகவல் அறிந்தும் தாய் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தாரை மட்டும் அல்லாமல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இருவரின் உடல்களுக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT