Published : 05 Feb 2022 10:19 AM
Last Updated : 05 Feb 2022 10:19 AM

தெள்ளாறு அருகே பென்னாடகரன் கிராமத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த 4 சிலைகள் கண்டெடுப்பு: 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை

தெள்ளாறு அருகே பென்னாட கரன் என்ற கிராமத்தில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த 4 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா, சரவணன் உள்ளிட் டோர் அடங்கிய குழுவினர் வந்த வாசி அருகேயுள்ள தெள்ளாறு பகுதியில் நடத்திய ஆய்வில் பென்னாடகரன் என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகே 2 சிலைகளை கண்டறிந்தனர். அதில், ஒன்று விஷ்ணு சிலை மண்ணில் பாதி புதைந்திருந்தது.

நான்கு கைகளுடன் மேல் வலது கையில் பிரயோக சக்கரமும், மேல் இடது கையில் சங்கும், கீழ் வலது கையில் அபய முத்திரையும், கீழ் இடது கையில் கடி முத்திரையில் இடையின் மீது வைத்திருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் பட்டையான சரப் பளியும், தோளில் இருந்து சரிந்து மார்பின் மீது பரவி பின் வலது கைக்கு மேல் ஏறும் நிவித முப்புரி நூலுடன் நான்கு கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளைகளுடன் உள்ளன. இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக கருதப்படுகிறது.

இதன் அருகில் பலகை கல்லில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் உள்ளது. நான்கு கரங்களுடன் பத்மாசன கோலத்தில் பருத்த வயிற்றுடன் பீடத்தில் அமர்ந்தவாறு இருக்கும் சிலை மிகவும் தேய்மானம் அடைந்துள்ளது. பல்லவர் கால பிள்ளையார் சிலையுடன் ஒத்துப் போவதால் இந்த சிலை 7-ம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் அல்லது 8-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடிக்கப்பட்ட சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரை வயல்வெளியில் சாய்ந்த நிலையில் இருந்த சிற்பம் கொற்றவை என தெரியவந்தது. அழகான ஜடா மகுடம் தலையை அலங்கரிக்க கழுத்தில் கண்டிகை மற்றும் சவடி அணிந்து அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் உள்ளார். எட்டு கரங்களில் மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரம், ஏனைய வலது கரங்கள் முறையே போர் வாள், சூலம் ஏந்திய நிலையில் நான்காவது வலதுகரம் அபய முத்திரையும், மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கரங்களில் முறையே குறுவாள், மான் கொம்பு ஏந்தியும், கீழ் இடது கரம் இடையின் மீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளன. கொற்றவையின் இருபுறமும் வீரர்களும், கலைமான் காட்டப்பட்டுள்ளது.

மேலும், எருமை தலையின் மீது திரிபங்க நிலையில் காட்சி தருவதுடன் கொற்றவையின் தலை அருகே பெரிய சூலம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. சிலை வடிவத்தின் அடிப்படையின் இது 8-ம் நூற்றாண்டாக கருதப் படுகிறது.

இதே கிராமத்தில் கற்பலகை யில் தவ்வை சிற்பம் உள்ளது. மாந்தன், மாந்தியுடன் அவரின் ஆயுதமான துடைப்பம் மற்றும் காக்கை கொடியுடன் தவ்வை அமர்ந்த நிலையில் உள்ளது. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல்லவர் கால கோயிலில் இருந்துள்ளது. கால ஓட்டத்தில் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x