

சென்னை: சென்னை 162-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோத்குமார் மணக்கோலத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் முக்கியக் கட்சிகள் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.
குதிரை, மாட்டு வண்டிகளிலும், தலைவர்கள் எம்ஜிஆர், ஸ்டாலின், கருணாநிதி வேடங்களிலும் சில வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தது கவனம் ஈர்த்தது.
அந்த வகையில், சென்னை ஆலந்தூர் மாநகராட்சி அலுவலகத்தில், சென்னை 162-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோத்குமார் மணக்கோலத்தில் தனது மனைவியுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.