அறநிலையத் துறை பணியாளர்கள் இடமாறுதல் அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பு

அறநிலையத் துறை பணியாளர்கள் இடமாறுதல் அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பு
Updated on
1 min read

மதுரை: இந்து சமய அறநிலையத் துறை இடமாறுதல் தொடர்பான தமிழக அரசின் அரசாணை மற்றும் விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சுதர்சனம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அரசாணை 132-ல் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே கோயிலில் பணிபுரியும் பணியாளர்களை, அதே அந்தஸ்தில் உள்ள கோயில்களுக்கு இடமாறுதல் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் விதிமுறைகளை பிறப்பித்துள்ளார். அதில் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் மண்டல இணை ஆணையரால் ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அந்தப்பட்டியலில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இடமாறுதல் செய்யப்படுவர். அதிக பணியாளர்கள் இருந்தால், அனுபவத்தின் அடிப்படையில் பணியாளரின் சேவை தேவைப்படும் போது இடமாறுதல் அளிக்கலாம் என விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

பணி நியமனம் பெற்ற கோயில்களில் தொடர்ந்து பணிபுரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட பதவி உயர்வு மற்றும் முதுநிலை அந்தஸ்து பெற முடியும். அதேநேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடமாறுதல் செய்யப்பட்ட கோயில் அறங்காவலர் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அற நிலையத் துறை பணியாளர்கள் இடமாறுதல் அரசாணை மற்றும் அது தொடர்பான விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். அவற்றை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு விசாரித்தது. பின்னர், அறநிலையத் துறை இடமாறுதல் அரசாணை, விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்து, மனு தொடர்பாக அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை பிப். 21-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in