

புதுச்சேரி: புதுச்சேரி - முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் காருக்கு அடியில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தண்டனை விவரம் மாலையில் அறிவிக்கப்படவுள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் வீடு, எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது, இணை அமைச்சராக பதவி வகித்தார். அதே ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி அவரது வீட்டில், காருக்கு அடியில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பு, தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த திருச்செல்வம், தங்கராசு, தமிழரசன், காளிலிங்கம், ஜான் மார்ட்டின், கார்த்திக் ஆகிய ஆறு பேரை கைது செய்தது.
தேசிய புலனாய்வு அமைப்பு இவ்வழக்கினை விசாரித்தது. இவ்வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் 85க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, இருதரப்பு வாதமும் முடிவடைந்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, காணொலியில் நடந்த இவ்விழக்கில் முதன்மை நீதிபதி செல்வநாதன் குற்றம் சாட்டப்பட்ட ஆறுபேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று மாலையில் அறிவிக்கப்படவுள்ளது.