

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டையுடன் அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் 28-ம் தேதி வரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தொடர்ந்து 29-ம் தேதி மாவட்டத்தில் 2 பேரும், 31-ம் தேதி 49 பேரும், பிப்.1 ம் தேதி 35 பேரும், 2-ம் தேதி 149 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிக் கட்டம் நெருங்கி வந்துவிட்டதால் நேற்றும், இன்றும் தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகளில் ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் உள்ள காந்திஜி சாலையில் ரயிலடி முதல் ஆத்துப்பாலம் வரை போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.
திமுக, அதிமுக, விஜய் மக்கள் இயக்கம் போன்ற அரசியல் கட்சிகள் ஊர்வலமாக வந்து, பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டையுடன், விசிலடித்து, ஆடிப்பாடியபடி வந்தனர்.
மாநகராட்சி அலுவலகத்துக்குள் வேட்புமனு தாக்கல் செய்பவரோடு மூவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், மற்றவர்கள் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்ததால் அவ்வப்போது கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்திலும் அரசியல் கட்சியினர் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ததால், அந்தப் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.