Published : 04 Feb 2022 06:57 AM
Last Updated : 04 Feb 2022 06:57 AM

கோயில்களுக்கு வருவாய் ஈட்டுவதற்காக 2.67 லட்சம் சொத்துகளை வாடகைக்கு விட வேண்டும்: அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வருவாய் ஈட்டாமல் உள்ள 2.67 லட்சம் இனங்களிலான கோயில் சொத்துகளை குத்தகை, வாடகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள இந்து சமயஅறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் துறை ஆணையர் குமரகுருபரன் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கோயில்களில் பணிபுரியும் வட்டாட்சியர்கள், உதவி ஆணையர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு, அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை கோயில்களுக்கு சொந்தமான 27 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அளவிடும் பணிகள் முடிந்து, நிலக்கல் ஊன்றி, வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. எஞ்சிய நிலங்களை 150நில அளவையர் மூலம் 56 ரோவர்கருவிகளைக் கொண்டு அளவிடும்பணி நடந்து வருகிறது. இப்பணியைவிரைந்து முடிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அற நிறுவனங்களுக்கு சொந்தமான மொத்த சொத்துகள் 3,65,667 இனங்கள் உள்ளன. அதில் 98,596 இனங்கள் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது. எஞ்சிய 2,67,071 இனங்கள் எவ்வித வருவாயும் ஈட்டாமல் உள்ளன. வருவாய் ஈட்டாத இனங்களைகோயில்வாரியாகக் கண்டறிந்து அவற்றை குத்தகை, வாடகைக்குவிட்டு, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அற நிறுவனங்களின் கேட்பு வசூல் நிலுவை குறித்த முழு விவரங்களையும் கணினியில் பதிவேற்றம் செய்யுமாறு கூறப்பட் டுள்ளது.

கோயில் சொத்துகளுக்கு பட்டா,சிட்டா வாங்குவதற்கான பணிகளைமாவட்ட வருவாய் அலுவலர்களுடன் இணைந்து முடிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நியாய வாடகை நிர்ணயம் செய்ய வேண்டிய புலங்களின்அரசு வழிகாட்டி மதிப்பை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக பெறுவதுடன், அவற்றை இணையதளத்திலும் சரிபார்க்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே அப்புலங்களுக்கான இறுதி நில மதிப்பு நிர்ணயம் செய்யப்படும். இரண்டுக்கும் வேறுபாடு இருந்தால், மாவட்ட பதிவாளரிடம் சரியான மதிப்பை பெற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x