Published : 04 Feb 2022 09:15 AM
Last Updated : 04 Feb 2022 09:15 AM

தெற்கு ரயில்வேக்கு ரூ.7,134 கோடி ஒதுக்கீடு; இரட்டை பாதை, அகலப் பாதை திட்டங்களுக்கு கூடுதல் நிதி: பொதுமேலாளர் ஏ.கே.அகர்வால் தகவல்

சென்னை: ரயில்வே துறையின் தெற்கு ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளுக்கு மொத்தம் ரூ.7,134 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டை பாதை, அகலப் பாதை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஏ.கே.அகர்வால் தெரிவித்துள்ளார்.

2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தெற்கு, வடக்கு, மேற்கு, வடகிழக்கு, மத்திய ரயில்வே உள்ளிட்ட மொத்தமுள்ள 17 மண்டலங்களுக்கு இந்நிதியை மத்திய ரயில்வே துறை பிரித்து வழங்கி அறிவித்துள்ளது. இதில்,தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.7,134 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஏ.கே.அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரயில்களை பாதுகாப்பாக இயக்கவும் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், ரயில் திட்டப் பணிகளை மேற்கொள்ள மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.7,134 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அகல பாதை திட்டங்களுக்காக ரூ.346.80 கோடி, சுரங்கப் பாதை மற்றும் மேம்பாலம் அமைக்க ரூ. 464 கோடி, இரட்டை பாதை திட்டங்களுக்கு ரூ. 381.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தண்டவாளங்களை புதுப்பிக்க ரூ. 1,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, நடைமேடைகள் விரிவாக்க கட்டமைப்பு பணிகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வேயில் ஏற்கெனவே நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாக முடிக்கும்வகையில் பழைய திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் தமிழகத்தில் நடைபெற்று வரும் 11 புதிய ரயில் பாதைதிட்டப் பணிகளில் 10 திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11-வது திட்டமாக ராமேசுவரம் –தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்துக்கு மட்டும் ரூ.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழைய திட்டங்களுக்கு கவனம் செலுத்தி, திட்டப் பணிகளை விரைவாக முடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யும்போது பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x