Published : 04 Feb 2022 09:20 AM
Last Updated : 04 Feb 2022 09:20 AM

உள்ளாட்சித் தேர்தலில் 1000 பேருக்கு மிகாமல் கூட்டம் நடத்த விரைவில் அனுமதி: வேட்பாளர்கள் 20 பேருடன் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 1000 பேருக்கு மிகாமல் பொதுக்கூட்டம் நடத்தவும், 20 பேருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கவும் அனுமதி அளிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கரோனா தொற்று பரவல் இல்லாமல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அது தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுடன் கலந்தாலோசித்து, தேர்தலின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பிப்.11 வரை கட்சிகள், வேட்பாளர்கள் அல்லது தேர்தல் தொடர்புடைய எந்த ஒரு குழுவும் பாத யாத்திரை, சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஊர்வலம் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதன் அடிப்படையில், அவ்வப்போது, வாக்கு சேகரிக்கும் காலத்தில் அப்போதைய நிலையை கருத்தில் கொண்டு பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிப்பது குறித்து மீண்டும் மீண்டும் ஆய்வு செய்யப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட திறந்தவெளி மைதானங்களில் அரசியல் கட்சி அல்லது போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 1000 பேர் அல்லது கூட்ட திடலின் கொள்ளளவில் 50 சதவீதம் பேரைக் கொண்டு கூட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

கூட்டம் நடத்துவதற்கான இடத்தை முன்கூட்டியே கண்டறிவதும், அறிவிப்பதும் தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலர்களின் கடமையாகும். உள்ளரங்கில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் அல்லது உள்ளரங்க கொள்ளளவில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உள்ளரங்க கூட்டத்துக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, பாதுகாவலர் நீங்கலாக 20 நபர்களை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x