

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அரசியல் கட்சியினர் சுயேச்சையாக களம் இறங்குவது கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கி இன்றுடன் (4-ம் தேதி) நிறைவு பெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் 5 நகராட்சி, 19 பேரூராட்சிகளில் உள்ள 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுக்கு அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என பலரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், கொமதேக, விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் தங்களது வார்டில் சுயேச்சையாக களம் இறங்கி வருகின்றனர்.
நாமக்கல் நகராட்சியில் 16-வது வார்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.டி. சரவணன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதுபோல் கூட்டணியில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாமக்கல் நகராட்சியில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளனர். மற்ற நகராட்சிகளிலும் இந்நிலை உள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை அதன் கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் அதிமுகவினர் நேரடியாக களம் இறங்கியுள்ளனர். எனினும், வாய்ப்பு கிடைக்காத அதிமுகவினரும் சில இடங்களில் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
திருச்செங்கோடு நகராட்சி 1-வது வார்டுக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அதிமுக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். எனினும், வேட்புமனு வாபஸ்க்கு பின்னர் தான் அரசியல் கட்சியினர் எத்தனை பேர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர் என்பது தெரியவரும்.
எனினும், அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்களாக களம் இறங்குவது கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதேவேளையில் சுயேச்சைகளாக வேட்புமனு தாக்கல் செய்த கட்சியினரை சமரசம் செய்யும் முயற்சியிலும் கட்சி நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.