Published : 04 Feb 2022 08:32 AM
Last Updated : 04 Feb 2022 08:32 AM
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மாயமான 3 சிலைகள், கோயில் குளத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளனவா என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கோயிலில் 2004-ம் ஆண்டுகும்பாபிஷேகம் நடத்துவதற்குமுன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை, ராகு மற்றும் கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாகக் கூறி, அந்த சிலைகள் மாற்றப்பட்டு, புதிய சிலைகள் வைக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்தப் பணிகள் நடைபெற்றன.
ஆனால், கோயில் சிலைகளை மாற்றுவதற்கு அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இரவோடு இரவாக 3 சிலைகளும் மாற்றப்பட்டன.
இவ்வாறு மாற்றப்படும் சிலைகளை ஆகமவிதிப்படி பூஜை செய்து, மண்ணில் புதைத்து வைத்திருக்க வேண்டும். ஆனால், 3 சிலைகளையும் அதிகாரிகள் துணையுடன் வெளிநாட்டுக்கு கடத்தி, பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான புகாரின்பேரில், அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, கோயில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.இதில் சிலைகள் காணாமல்போனது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக ரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மற்றும் அறநிலையத் துறையின் உண்மை கண்டறியும் குழுவினர், தங்களது விசாரணையை 6 வாரத்துக்குள் முடித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலைகள் கடத்தல் தடுப்புப்பிரிவினர் நடத்திய விசாரணையில், கோயிலின் தெப்பக் குளத்தில்சிலைகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.
எனவே, மாயமான சிலைகளை கோயில் தெப்பக் குளத்தில் தேடுவதற்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக தீயணைப்புத் துறையினரின் உதவியையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கேட்டுள்ளனர். விரைவில் மயிலாப்பூர் கோயில் தெப்பக் குளத்தில் சிலைகளைத் தேடும் பணி நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT