

திருவள்ளூர்: தமிழகத்தில் தற்போது டெல்டா, ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ்கள் சேர்ந்து பாதிப்பை ஏற் படுத்துவதால், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள் அவசியமாக இருக்கின்றன என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பொதுச் சுகாதாரம் மற்றும்நோய்த் தடுப்பு மருந்துத் துறைசார்பில், தமிழகத்தில் 600 இடங்களில் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வியாழக்கிழமைதோறும் நடந்து வருகிறது.
அந்த வகையில், நேற்று திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நடந்த சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் நேற்று (நேற்று முன்தினம்) மாலைவரை 5 லட்சத்து 6 ஆயிரத்து 50 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதிஉடையவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 908 பேர் பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர்.
அதேபோல் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்களில், 26 லட்சத்து 26 ஆயிரத்து 311 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்; அவர்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதால், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 62 லட்சத்து 64 ஆயிரத்து 828 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 96 லட்சத்து 22 ஆயிரத்து 615 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர். இவர்கள் உடனடியாக தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தற்போது டெல்டா, ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ்கள் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துவதால், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள் அவசியமாக இருக்கின்றன. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 10 சதவீதம், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 7 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. அதேபோல்,ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் 5 சதவீதமே பயன்பாட்டில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம், துணை இயக்குநர் ஜவஹர்லால், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராசன், துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.