Last Updated : 24 Jun, 2014 10:04 AM

 

Published : 24 Jun 2014 10:04 AM
Last Updated : 24 Jun 2014 10:04 AM

விரைவில் டிஜிட்டல் மயமாகிறது ‘பவள மல்லி - 75 ஆண்டுகளை நிறைவு செய்தது திருச்சி வானொலி நிலையம்

தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் உட்கார்ந்து சீரியல்களைப் பார்த்து அழுது கண்ணீர் வடிக்கும் தலைமுறை இது என்றால் இதற்கு முந்தைய தலைமுறை வானொலிப் பெட்டியின் வாசல் வழிவந்த எம்.எஸ்.வி. மற்றும் இளையராஜாவின் இசையால் கட்டுண்டு ஒலிப் பெருவழியில் மனம் லயித்துக் கிடந்தது என்பதை பெருமை யாகக் கூறலாம். அப்படி லயித்துக் கிடந்தவர்களின் மனதில் திருச்சி வானொலி நிலையம் இன்றும் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம்.

தொலைக்காட்சிகளும் செல்போன்களும் ஆக்டோபஸ்போல மக்களைப் பிடித்துக் கொண்டிருந்தாலும், திருச்சி வானொலி நிலையத்தின் ‘பவள மல்லி' நிகழ்ச்சியின் மதுவுண்ட வண்டுகளாய் மயங்கிக் கிடக்கும் நேயர்கள் நிறையவே உள்ளனர்.

ஓசையின்றி கொண்டாட்டம்

இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆறு வானொலி நிலையங்களில் திருச்சி வானொலி நிலையமும் ஒன்று. மே 16,1939-ல் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு செய்த திருச்சி வானொலி நிலையம் மக்களவைத் தேர்தல் களேபரத்தில் சத்தமில்லாமல் பவள விழா கொண்டாடியுள்ளது.

பவள விழாவையொட்டி பழைய இசைத் தட்டுகளையும், நிலையத்துக்கு வந்து பேசிய தலைவர்களின் உரை களையும், கலைஞர்களின் நிகழ்ச்சி யையும்‘பவள மல்லி' நிகழ்ச்சியில் மீண்டும் காற்றில் பரப்பி நேயர்களை கால இயந்திரத்தில் பின்னோக்கி அழைத்துச் சென்று வருகிறது திருச்சி வானொலி நிலையம்.

தலைவர்களும்… நட்சத்திரங்களும்…

அப்படி நிலையத்துக்கு வந்த பெரியார், “எனக்கு பதவி, பணம் தேவையில்லை. மக்களிடையே பகுத்தறிவைப் பரப்பு வதுதான் நோக்கம். மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கையை ஒழிப்பது தான் நோக்கம்” என்று பேசியிருக்கிறார். ராஜாஜி, வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகம் போராட்டத்தை பற்றியும், அண்ணா, அமெரிக்காவின் விவசாய முறைகளைப் பற்றியும் பேசியுள்ளனர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி, ராதா ஜெய லட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள், பாலமுரளிகிருஷ்ணா போன்ற கர்நாடக இசை ஆளுமைகள் நிலையத்துக்கு வந்து பாடியுள்ளனர். தனது எழுத்துகளில் இசையைக் கோர்த்து வாசிப்புக்கும் நேசிப்புக்கும் தந்த எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் பேசியிருக்கிறார். நடிகர் கமலஹாசன், நடிகை மனோரமா போன்றவர்களும் வந்து பேசியுள்ளனர்.

இத்தகு பெருமைமிகு திருச்சி வானொலி நிலையம் இன்று திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நேயர்களை தனது இனிய இசைக்கரங்களால் கட்டிப்போட்டு வைத்துள்ளது. திருச்சி வானொலி நிலையம் வானவில் பண்பலை அலைவரிசையையும், கர்நாடக இசைக்கென தனியாக ராகம் டி.டி.எச். என்ற ஒரு அலைவரிசையையும் நடத்திவருகிறது. பண்பலை அலைவரிசைக்கென தனியாக 25 லட்சம் நேயர்கள் உள்ளனர்.

இசைத்தட்டு காலம் முதல் கணினி காலம்வரை காலத்தைக் கடந்து வந்திருக்கும் திருச்சி வானொலி நிலையத்தின் பழைய இசைத் தட்டுகளை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பவள விழா குறித்து நிலைய உதவி இயக்குநர் ஜோதிமணி இளங்கோவனிடம் பேசியபோது அவர் கூறியது:

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட வானொலி நிலையங்களில் திருச்சி வானொலி நிலையமும் ஒன்று. மக்கள் சேவையில் திருச்சி வானொலி நிலையத்தின் மகத்தான பணி மறக்க முடியாதது. 75 ஆண்டுகள் நிறைவில் திருச்சி வானொலி நிலையம் டிஜிட்டல் மயமாக உள்ளது. பண்பலை அலைவரிசையைப்போல துல்லியமாக ஒலிபரப்பு செய்யும் நவீன தொழில்நுட்ப டிரான்ஸ்மீட்டர்கள் வந்துள்ளன. இன்னும் 3 மாதங்களில் திருச்சி வானொலியின் நிகழ்ச்சிகள் புத்தொலியுடன் ஒலிபரப்பாகும்” என்றார்.

பவள விழா கொண்டாடும் திருச்சி வானொலி நிலையத்தின் அடுத்த பயணம் புத்தொலியுடன் தொடங்கிவிட்டது. அது காலத்தையும் வான மண்டலத்தையும் கடந்து தனக்கான தனித்தன்மையை என்றும் இழக்காமல் நூற்றாண்டு விழாவை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x