Published : 04 Feb 2022 08:33 AM
Last Updated : 04 Feb 2022 08:33 AM
இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வ மானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். இந்த ஆமைகள் புதுச்சேரி, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட கடலோர பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மே மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
அதேநேரத்தில், இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக மீன்படி படகு இன்ஜின்கள், கைவிடப்பட்ட வலைகளில் சிக்கி இறக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 40 ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.
இந்நிலையில் கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு பகுதியில் பழைய மீன்பிடி வலையில் சுமார் 30 கிலோ எடை கொண்ட ஆலிவ் ரிட்லி ஆமை ஒன்று சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது. இதைக்கண்ட அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் ஆமையை வலையில் இருந்து விடுவித்து, அதனை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய செய்தது.
‘‘மனிதர்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கைவிடப்பட்ட வலைகளை கடலில் கொட்டுவதன் மூலம் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆகவே தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகள், கைவிடப்பட்ட மீன் வலைகளை கடலில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்’’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT