Published : 04 Feb 2022 08:31 AM
Last Updated : 04 Feb 2022 08:31 AM
புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்கு வீட்டிலிருந்து தட்டு, டம்ளர் கொண்டு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை கடந்த மாதம் 10-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 10, 11, 12-ம்வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் கடந்த மாதம் 18-ம் தேதி முதல் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியதால் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும் மற்றும் கல்லூரிகள் இன்றுமுதல் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.
இதையடுத்து பள்ளிகளில் வகுப்பறைகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறை களை கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு அறிவித்துள்ளார்.
அதன் விவரம்:
கரோனா விதிமுறைகளை பின்பற்ற போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலில் 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தலாம். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் வகுப்புகள் நடத்த வேண்டும். போதிய இடைவெளி நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர் கள் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள், பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளிக்கு வரும்போது வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும். காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்களை மட்டுமே அனு மதிக்க வேண்டும். வருகைப் பதி வேடு கட்டாயமில்லை. பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும். பள்ளிகளில் இறை வணக்கம், கூட்டமாக கூடுவது, கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. பள்ளி வாகனங்களை கட்டுப் பாடுகளுடன் இயக்க வேண்டும். வாகனங்களை நாள்தோறும் சுத்தப்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு மதிய உணவு, பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை வழங்குவோர் கையுறை அணிந்து சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தட்டு, டம்ளர் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கரோனா விதிமுறைகளை பின்பற்ற போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலை சுட்டிக்காட்டி பல பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் இயங்குவதாக தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT