Published : 04 Feb 2022 08:40 AM
Last Updated : 04 Feb 2022 08:40 AM

கட்சி தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவு- பொறுப்புக்காக காத்திருக்கும் என்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள்

புதுச்சேரி

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்துவந்து கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் ரங்கசாமி. கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்து முதல்வரானார். 11 ஆண்டுகள்முடிந்து 12-வது ஆண்டில் நுழையஉள்ள சூழலிலும் மாநில அளவி லான நிர்வாகிகளைத் தவிர மாவட் டம் மற்றும் தொகுதி அளவிலான நிர்வாகிகள் என்ஆர் காங்கிரஸில் நியமிக்கப்படவில்லை. பெரிய கட்சி களைப் போல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, அடையாள அட்டை தருவது போன்ற பணிகள் கூட நடக்கவில்லை.

இரண்டாவது முறையாக என்ஆர் காங்கிரஸ் அரசு அமைந்துள்ள சூழலில் வரும் கட்சி ஆண்டுவிழா என்பதால் சிறப்பாக நிகழ்வை கொண்டாட கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலர் ஜெயபால் வெளி யிட்ட அறிக்கையில், “சுதந்திர புதுச்சேரி வரலாற்றில் எந்த ஆட்சியும் நிறைவேற்றாத மக்கள் நலப்பணிகளை கடந்த காலங்களில் செய்த கட்சி என்ஆர் காங்கிரஸ். மக்கள் சக்தியின் துணையோடு ஆட்சியை பிடித்தோம். ரங்க சாமி தலைமையில் மக்கள் நலத்திட்டங்கள் தொய்வின்றி தொடர புதுச்சேரி முன்னேற்ற பாதையில் பயணிக்க அவரது கரத்தை மக்கள் வலுத்தப்படுத்த வேண்டும். வரும் 7-ம் தேதி 12-ம் ஆண்டில் கட்சி அடியெடுத்து வைக்கிறது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் முதல் வர் ரங்கசாமி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்குவார். மாலை 6 மணிக்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து இளைஞர் அணி சார்பில் மோட்டார் வாகன அணிவகுப்பு நடக்கும். மாநிலம் முழுக்க நலத்திட்ட நிகழ்வுகள் நடக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உறுப்பினர் அட்டையாவது தாருங்கள்

தொண்டர்கள் தரப்பில் கூறுகையில், “என்ஆர் காங்கிரஸ் தொடங்கி இரண்டாவது முறை யாக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றுள்ளது. மாவட்டம், தொகுதிஅளவிலான நிர்வாகிகள், விவசாய அணி, இளைஞர் அணி, மகளிர் அணி எந்த அணிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. தொகுதிக்கு நிரந்தர நிர்வாகிகள் இல்லாமல்தான் தேர்தல்களைச் சந்தித்தோம். பலரும் கட்சிக்காக உழைத்தோம்.

இனியாவது கட்சி பொறுப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். முதலில் கட்சி உறுப்பினர் அடையாள அட்டையா வது தர வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

கட்சித் தரப்பில் உள்ள முக்கிய மானவர்களோ, “அனைத்திலும் இறுதி முடிவு எடுப்பது கட்சித் தலைவர் தான். விரைவில் அவர் நல்ல முடிவை தெரிவிப்பார்” என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x