Last Updated : 03 Feb, 2022 05:34 PM

 

Published : 03 Feb 2022 05:34 PM
Last Updated : 03 Feb 2022 05:34 PM

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை: போலீஸ் விசாரணை

கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயிலைச் சேர்ந்தவர் சக்திவேல் (38). இவர், குற்றச் சம்பவம் தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் வெள்ளகோயில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சக்திவேல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் விசாரணைக் கைதிகள் பிரிவில் 9-வது பிளாக்கில் சக்திவேல் அடைக்கப்பட்டு இருந்தார்.

நேற்று (பிப்.2) மாலை வழக்கம் போல் சிறையில் உள்ள தனது அறையில் சக்திவேல் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (பிப்.3) காலை சிறைத்துறை அதிகாரிகள் பார்த்த போது, தனது அறையில் சக்திவேல் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த சிறைக்காவலர்கள், இச்சம்பவம் தொடர்பாக சிறைத் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். தற்கொலை செய்துகொண்ட கைதி சக்திவேலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கைதி சக்திவேல் மன வேதனை அடைந்த நிலையில் காணப்பட்டு வந்ததாகவும், சக கைதிகள் யாருடனும் சரிவர பேசவில்லை எனவும் தெரியவந்தது.

மன உளைச்சல் காரணமாக கைதி சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் அவரது தற்கொலைக்கு ​வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீஸார் விசாரிக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x