

மதுரை: கடந்த ஆண்டு கேரளா உள்ளாட்சித் தேர்தலை போல் தற்போது நடக்கும் தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் போட்டியிட ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்து வருவது முக்கிய கட்சிகளை கலக்கமடைய வைத்துள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தற்போது சுயேச்சைகள் முதல் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வரை, கவுன்சிலராக போட்டியிட ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளில் படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள், திருநங்கைகள் மற்றும் பல்வேறு தரப்பினர் போட்டியிட ஆர்வமடைந்துள்ளனர். இவர்களில் பலருக்கு திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளில் ‘சீட்’ வழங்கப்பட்டுடள்ளது. ‘சீட்’ கேட்டு கிடைக்காதவர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். அதனால், இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இளைஞர்கள், மாணவர்கள் முக்கிய போட்டியாளர்களாக திகழும் வாய்ப்புள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு கேரளா உள்ளாட்சித் தேர்தலில் இதுபோல் அதிகமான இளம்பெண்கள், மாணவர்கள் போட்டியிட்டது பரவலாக பேசும் பொருளானது. தற்போது அதுபோல் தமிழகத்திலும் இளைஞர்கள், மாணவர்கள் இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட களம் காண வந்துள்ளது முக்கிய அரசியல் கட்சிகளை கலக்கமடைய வைத்துள்ளது. தமிழக அரசியல் களத்தில் முக்கிய இடம் வகிக்கும் மதுரை மாவட்டத்திலும் இந்தத் தேர்தலில் இளைஞர்கள், மாணவர்கள் ஏராளமானோர் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகனா என்ற 22 வயது மாணவி மாநகராட்சி 28-வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் எம்.ஏ பொருளாதாரம் பட்டம் பெற்று தற்போது ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வருகிறார். இவர் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த நிலையில், வாய்ப்பு கிடைக்காததால் தற்போது சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.
"மதுரையில் மக்களின் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடங்கிப்போய் கிடக்கிறது. அவற்றை நான் வசிக்கும் வார்டுக்குட்பட்ட பகுதியிலாவது குறைந்தப்பட்சம் மேம்படுத்தலாம் என்ற அடிப்படையில் போட்டியிடுகிறேன்" என்றார் மோகனா.
மேலும் அவர் கூறுகையில், ‘‘அரசியல் ஒரு சாக்கடை என்று அனைவரும் புறக்கணித்தால் தவறான நபர்களேதான் நிர்வாகத்திற்கு வருவார்கள். முதலில் மாற்றம் நம்மிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். மக்களுடைய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய இடத்தில் ஏதாவது ஒரு வகையில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கனவோடுதான் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். அதற்கான காலம் இன்னும் கனியாததால் அதற்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் வந்ததால் இந்த தேர்தலில் வெற்றிப்பெற்று என வார்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடுகின்றேன்’’ என்றார்.
எலி பொறியுடன் வந்த வேட்பாளர்
அதுபோல் விமானப் பொறியாளர் ஜாபர் ஷெரீப் மாநகராட்சி 8-வது வார்டில் போட்டியிட மண்டலம் 1-வது அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது எலி பொறியுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் கூறுகையில், ‘‘பொறியில் சிக்கிய எலியும், பணத்திற்கு வாக்கை விற்ற மக்களும் ஒன்றுதான். தப்பிக்கவே முடியாது. வெற்றி - தோல்வி ஒருபுறம் இருந்தாலும் குறைந்தப்பட்சம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தேர்லில் போட்டியிடுகின்றேன்’’ என்றார்.
சிலம்பத்துடன் வந்த வேட்பாளர்
மாநகராட்சி 78-வது வார்டில் போட்டியிடுவதற்காக மக்கள் நீதி மய்யம் சார்பில் நேற்று கண்ணகி போல் கால் சிலம்பை கையில் ஏந்தியபடி நூதன முறையில் பொறியியல் பட்டதாரி மதுமிதா அசோகன் மண்டலம் 4-வது அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் கூறுகையில், ‘‘சிறு வயதிலே அரசியல் ஆர்வம் உண்டு. படிக்கும்போதே அரசியல் ஈடுபாடுள்ள சக மாணவர்களுடன் கலந்துரையாடுவேன். நாட்டு நடப்புகள் குறித்து அதிக விமர்சனம் வைப்பேன். அந்த ஆர்வமே இந்த தேர்தலில் என்னை மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வைத்துள்ளது’’ என்றார்.