Published : 03 Feb 2022 06:33 AM
Last Updated : 03 Feb 2022 06:33 AM

‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி சிறப்புக் கலந்துரையாடல்; அனைவருக்கும் பிடித்த எளிய மனிதராக விளங்கியவர் அப்துல் கலாம்: கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் பெருமிதம்

சென்னை: அனைவருக்கும் பிடித்த எளிய மனிதராக விளங்கியவர் அப்துல் கலாம் என்று‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில் கலாமுடன் இணைந்து பணியாற்றிய விண்வெளி விஞ்ஞானிகள் பெருமிதத்தோடு குறிப்பிட்டனர்.

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணையவழி சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் புதுடெல்லி டிஆர்டிஓ ‘செப்டாம்’ தலைவரும் மூத்த விஞ்ஞானியுமான ஆர்.அப்பாவுராஜ், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு பங்கேற்று கலந்துரையாடினர். இந்நிகழ்வில் அவர்கள் பேசியதாவது:

டிஆர்டிஓ ‘செப்டாம்’ தலைவர் ஆர்.அப்பாவுராஜ்: 1981-ம் ஆண்டு அப்துல் கலாமுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அப்போது நான் எம்ஐடி-யில் 3-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் கல்லூரியில் கலாமுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். அந் நிகழ்ச்சிக்கு வந்த கலாம், எங்கள் வகுப்புக்கும் வருகை தந்தார். ரோஹினி ஏவுகணை பற்றி அப்போது கலாம் எங்களுக்கு வகுப்பெடுத்தார்.

அப்போது கலாமுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் நரசிம்மன், கலாமை பற்றிஅறிமுகம் செய்யும்போது, ‘‘கலாம், வகுப்பில் ஆவரேஜ் ஸ்டூடண்ட்தான். கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவர். பின்னிருக்கையில் தான் அமர்ந்திருப்பார். இந்த வகுப்பறையில் நாங்கள் ராக்கெட்டைப் பற்றி ஒருநாளும் சொன்னதில்லை. ஆனால் இன்றைக்கு ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தில் கலாம் மிகப் பெரிய விஞ்ஞானியாக திகழ்கிறார்’’ என்று பாராட்டினார்.

இதிலிருந்து, ‘கலாம் எதையுமே செல்ஃப் ஸ்டடீசெய்துகொள்ளும் திறமையுள்ளவர். தனக்குப்பிடித்த ஒரு துறையில் எதையும் சுயஆர்வத்துடன்கற்றுக்கொண்டு சாதனை படைக்கும் ஆற்றல்படைத்தவர்’ என்பதை அறிந்துகொண்டேன். ராக்கெட் தொழில்நுட்பத்தை கலாம் மிகுந்த ஈடுபாட்டோடு கற்றுக்கொண்டது பற்றியும், அதில் அவர் சந்தித்த சவால்கள் குறித்தும், எல்லோரையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக ஏவுகணை சோதனையை செய்து முடித்தது பற்றியும் அன்று அவர் கூறியவையே எங்களுக்கு அவர் விடுத்த செய்தியாக அமைந்தன.

ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு: ஏவுகணைகளை சோதனை செய்யும்போது, மிக சிக்கலான தருணங்கள் உண்டு. மிக கடினமான நடை முறைகளும் உண்டு. இவை எல்லாவற்றையும் கடந்தேஒரு ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்படுகிறது.இன்று ஏவுகணை தொழில்நுட்ப சோதனையில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது என்றால் ஏவுகணை நாயகராக நம் இந்திய மக்கள் அனைவராலும் அறியப்பட்டு, அனைவரின் நெஞ்சங்களிலும் உயரமான சிந்தனைகளால் இடம்பிடித்திருக்கும் அப்துல் கலாமையே சாரும்.

அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தவை பல்வேறு தடைகளைக் கடந்து, சில தோல்விகளையும் சந்தித்து விண்ணில் சிறப்பாக ஏவப்பட்ட ஏவுகணை சோதனைகளே. அப்படியான ஏவுகணை தொழில்நுட்பத்தை அனைவரிடத்தும் எளிமையாக கொண்டுசேர்க்க வேண்டுமென்பதில் ஆர்வம் கொண்டிருந்த கலாமின் எண்ணத்தை நடைமுறையாக்கும் செயலாகவே இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த கலந்துரையாடல் மூலமாக கலாம் எனும் ஏவுகணை நாயகரின் பெருமைகளை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வதோடு, ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பற்றி பலரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இதனால் உண்டாகிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ விற்பனைபிரிவு பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.htamil.org/00237 என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.

‘இந்து தமிழ் திசை’யின் யூ-டியூப்பில் இந்த நிகழ்வை பார்க்கும் வாசகர்கள் அனைவரிடமும் கலாம் குறித்து 2 கேள்விகள் கேட்கப்படும். சரியானபதில்களை விரைந்து அனுப்பும் 25 பேருக்கு கோவை கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி சார்பில் டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய நூல்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x