Published : 03 Feb 2022 06:27 AM
Last Updated : 03 Feb 2022 06:27 AM
சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதில்,கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 480 இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள்உள்ளன. இவற்றில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கான 40 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் போக மீதமுள்ள34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்திமற்றும் மேலாண்மைக் கல்லூரியில்கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தப் படிப்புகளுக்கு 2021-22-ம்ஆண்டு சேர்க்கைக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டன. இந்தப் படிப்புகளுக்கான நேரடிமற்றும் ஆன்லைன் கலந்தாய்வுஅறிவிப்பு விரைவில் இணையதளங்களில் தெரிவிக்கப்படும்.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவி பூர்வா (கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு - 199.71) முதலிடம் பிடித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தமாணவர் தீரஜ் (199.71) 2-ம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் நிஷாந்த் (198.285)3-ம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆதித்யா வினோத் (198.250) 4-ம்இடத்தையும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் சிவக்குமார் (198) 5-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேபோல, பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜெனிபர் (197.215), தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கனிஷ்கா (196.985), அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி குணப்பிரியா (196.815), திருவள்ளூர் மாவட் டத்தைச் சேர்ந்த மாணவி எம்சிஎன்.ஹரிணி(196.405), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ஹரிணி(195.859) ஆகியோர் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT