

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் திமுக இந்துக்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று பாஜக விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் நேரில் விசாரணை நடத்தி, அறிக்கை அளிப்பதற்காக பாஜகவை சேர்ந்த சந்தியா ரே, விஜயசாந்தி, சித்ரா தாய் வாக்,கீதா விவேகானந்தன் ஆகியோவை பாஜக தேசியத் தலைவர்ஜேபி நட்டா கடந்த வாரம் அமைத்தார். அக்குழுவினர் நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோரிடம் பேசினர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமைஅலுவலகத்தில் அக்குழுவினர்நேற்று செய்தியாளர்களுக் குப் பேட்டியளித்தனர். குழுவில் இடம்பெற்றுள்ள விஜயசாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
மாணவி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவில், தன்னைமதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும், தான்ஒப்புக்கொள்ளாததால், தன்னைதுன்புறுத்தினார்கள் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தினோம். மாணவியின் பெற்றோர், பிறரிடம் கூற தயக்கம் காட்டிய விஷயத்தைக்கூட, எங்களிடம் பகிர்ந்து கொண்டனர். இவற்றை அறிக்கையாக பாஜக தேசியத் தலைவர் நட்டாவிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.
அதேபோல, மாணவியின் குடும்பத்தினரை போலீஸார் விசாரணை என்ற பெயரில் தொல்லை செய்வதையும், பெற்றோரை திமுகவினர் மிரட்டுவதையும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மாணவியின் தந்தை திமுகவைச் சேர்ந்தவர். அவருக்கு திமுக அரசு நியாயம் வழங்கியிருந்தால், நாங்கள் இதில் தலையீட்டு இருக்க மாட்டோம். ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்துவ மதத்துக்கு திமுகஅரசு ஆதரவளிக்கிறது. ஆனால், இந்துக்களுக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை.
கிறிஸ்தவப் பள்ளிகளில் மதமாற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளது. கிறிஸ்துவ மதத்தில் சிறந்த மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக, நன்றாகப் படிக்கும் இந்து மாணவ, மாணவிகளை மதமாற்றம் செய்ய முயற்சி நடக்கிறது. எனவே, தமிழக மக்கள்கவனமாக இருக்கவேண்டும்.
அரசியல் செய்யவில்லை
இந்த விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. இந்தவிவகாரத்திலும் முதல்வர் அமைதியாக இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. மாணவிக்கும், அவரது அம்மாவுக்கும் நல்ல உறவு இருந்துள்ளது. ஆனால், சித்தி கொடுமை இருந்ததாக தகவல் பரப்பி, சிலர் இந்த விவகாரத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.
நாங்கள் சிபிஐ விசாரணைக்கு எந்த இடையூறும் அளிக்கவில்லை. தமிழகத்தின் கலாச்சாரத்தை மாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது. எனவேதான், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கூறும்போது, “இதில் உண்மையை அறிய, முழு விசாரணையை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இந்தியாவில் எந்த பகுதியாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக பாஜக துணை நிற்கும். போலீஸாரின் தவறால் மாநில அரசுக்கு பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய, சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.