Published : 03 Feb 2022 07:53 AM
Last Updated : 03 Feb 2022 07:53 AM

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடைய மலைப்பாதை விரிவாக்கத்தால் யானைகள் வழித்தடத்துக்கு சிக்கல்

குன்னூர்: அடர்வனத்தைக் கொண்டிருக்கும் நீலகிரி மாவட்டம் பல்வேறு வகையான வன உயிர்களின் புகலிடமாக இருந்து வருகிறது. இந்த அடர்வனத்தின் இடையே ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 14 கொண்டை ஊசி வளைவுகளுடன் வாகனங்கள் செல்ல பாதை அமைக்கப்பட்டது.

யானைகளின் முக்கியமான வாழிடமாக இருந்து வரும் இந்தப் பகுதிக்கு, கெத்தை - கல்லார் வழித்தடத்தைப் பயன்படுத்தும் யானைக் கூட்டங்கள் வறட்சிக் காலங்களிலும், பலா காய்க்கும் பருவங்களிலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும். அவ்விதம் வரும் யானைகள் இங்கு வந்து குட்டிகளுடன் சில காலம் முகாமிட்டு திரும்பிச் செல்வது வழக்கம். அது மட்டுமின்றி, இதே வனத்தில் நிரந்தரமாக உலவும் சில யானைக் கூட்டங்களும் உண்டு.

மலைப்பாதை உருவாக்கப்பட்டபோது யானைகளின் பூர்வீக வலசைப் பாதைகள் சிதைக்கப் பட்டிருந்தாலும், கால மாற்றத்தில் அதே வனத்தில் புதிய வழித்தடத்தை உருவாக்கி, மேட்டுப்பாளையம் மலை அடிவாரம் முதல் குன்னூர் மலை உச்சி வரை எவ்வித இடையூறுமின்றி யானைகள் சென்று வருவதாக, சமீபத்தில் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்த மலைப்பாதையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் யானைகள் வழக்கமாக பயன்படுத்தும் வழித்தடத்தை மறித்து, தடுப்புச் சுவர்களை எழுப்பி தடைபோட்டு வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘இந்த வனப் பகுதியில் கல்லாறு முதல் குன்னூர் ரண்ணிமேடு வரை நீர்நிலைகள், புல்வெளிகள் இருக்கும் நல்ல வளமானபகுதியாக உள்ளது. யானைகள் வலசைக்காக இந்த வழித்தடத்தை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றன. இந்தப் புது வழித்தடத்தை பயன்படுத்தும் யானைகள், சில இடங்களில் சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. தற்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலையை விரிவுபடுத்தி, புதிதாக தடுப்புச் சுவர் கட்டி வருகிறது. இதனால், யானைகள் வனத்துக்குள் செல்ல முடியாமல், அருகில் உள்ள கிராமங்களுக்குள் செல்லும் நிலை ஏற்படும். இது இன்னும் சிக்கலை உண்டாக்கும்” என்றனர்.

இந்நிலையில் வனத்துறை, வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் யானைகள் வழித்தடம் தொடர்பாக இந்த மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘யானைகள் கடந்து செல்லும் பகுதிகளை சர்வே செய்து 4 மீட்டர் முதல் 8 மீட்டர் வரை யானைகளுக்கான வழித்தடமாக அறிவிக்கச் சொல்லியிருக்கிறோம். நெடுஞ்சாலைத் துறையினர் அதற்கு ஒப்புக்கொண்டனர். வனவிலங்கு நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற விதிமுறையையும் எடுத்துக் கூறியிருக்கிறோம்” என்றனர்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையகோட்டப் பொறியாளர் செல்வன் கூறும்போது, “குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இரு இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன. இந்தப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும். அதில், ஒரு பணி 3 மாதங்களில் நிறைவடைந்துவிடும். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே சாலை குறுகலாக இருந்ததால் அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அங்கு தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது. அங்கு யானைகள் கடந்து செல்ல நிலையான இடம் விடப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x