Published : 03 Feb 2022 10:04 AM
Last Updated : 03 Feb 2022 10:04 AM

கேரளாவுக்கு தேயிலைத் தூள் விற்பனை செய்ததன் மூலமாக கிடைத்த லாபத்தை பகிர்ந்தளிக்காமல் விரயமாக்கும் ‘இண்ட்கோ சர்வ்’ நிர்வாகம்: சிறு, குறு தேயிலை விவசாயிகள் குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கும் தேயிலை விவசாயம் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதுடன், மேலும், ஒரு லட்சம் பேர் இத்தொழிலை சார்ந்துள்ளனர்.

மாவட்டத்தில் 180 தனியார்தேயிலை தொழிற்சாலைகளும், அரசுக்கு சொந்தமாக 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும் (இண்ட்கோ) உள்ளன. இதில், 30 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்கள்,தங்கள் தோட்டத்தில் விளையும்பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். அதற்கானவிலையை, அங்கத்தினர்களுக்குதொழிற்சாலைகள் அளிக்கின்றன.

கடந்த ஆண்டு இண்ட்கோ சர்வ் தேயிலைத்தூளை கேரள அரசு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலமாக அம்மாநில மக்களுக்கு இலவசமாக வழங்கியது. அதன்படி, கேரளாவுக்கு 1640 மெட்ரிக் டன் தேயிலைத் தூளை இண்ட்கோ சர்வ் விற்பனைசெய்தது. இதனால், இண்ட்கோசர்வ் கணிசமான லாபம் பெற்றது.ஆனால், அந்த லாபத்தில் அங்கத்தினர்களுக்கு பங்கு அளிக்காமல், தேவையற்ற செலவுகள் செய்து பணத்தை விரயம் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக சிறு விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஹெச்.என்.சிவன் கூறும்போது, "தொழில்நுட்பம் மற்றும் தர மேம்பாட்டுக்காக ரூ.70 கோடி மதிப்பில் புதிய இயந்திரங்கள் வாங்க, இண்ட்கோசர்வ் ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.

கேரள அரசுக்கு ஒரு கிலோரூ.150 என்ற விலையில், 82 லட்சம்கிலோ தேயிலைத் தூளை இண்ட்கோசர்வ் விற்பனை செய்தது. தேயிலை வாரியம் அறிவித்த விலை பகிர்ந்தளிப்பு திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகளுக்கு பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.30 வழங்க வேண்டுமென பல முறை முறையிட்டும், ரூ.15 முதல் ரூ.18 மட்டுமே இண்ட்கோசர்வ் நிர்வாகம் வழங்கியது.

நிர்வாகத்தின் இந்த அலட்சியப்போக்கு, சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. தேயிலை வாரியம் நிர்ணயிக்கும் விலையை உறுப்பினர்களுக்கு இண்ட்கோசர்வ் நிர்வாகம் வழங்க வேண்டும். இதுகுறித்து இண்ட்கோ சர்வ் மேலாண்மை இயக்குநர் சுப்ரியா சாஹூவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x