

சென்னை: சந்திரபிலா சுரங்கத்தில் உள்ள நிலக்கரியை எடுக்க மத்திய அரசின் அனுமதி பெறுவதற்கு உதவுமாறு ஒடிசா மாநில அரசிடம் தமிழக மின்வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒடிசா மாநிலம் ஆங்கூல் மாவட்டத்தில் 90 கோடி டன் இருப்புடைய சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியது. இதையடுத்து, சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வர 2019-ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. இதில், ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2020-ம்ஆண்டு மீண்டும் டெண்டர் கோரப்பட்டது. இதில், ஒரு நிறுவனம்கூட பங்கேற்காததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நிலக்கரி தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் மின் உற்பத்தியில் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுக்கும் பணியை துரிதப்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒடிசா மாநில உருக்கு மற்றும் சுரங்கத் துறை உயரதிகாரிகளுடன் தமிழக மின்வாரிய அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, சந்திரபிலா சுரங்கத்தில் மத்திய வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கும் நிலக்கரியை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தர உதவுமாறு ஒடிசா மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.