

சென்னை: பெகாசஸ் மென்பொருள் வாங்கி மத்திய அரசு உளவு பார்த்ததாக கட்டுரை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மீது ரூ. 100 கோடி இழப்பீடு கோரி சென்னை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு அதிக விலை கொடுத்து வாங்கி அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் என பலரது பேச்சுக்களை ஒட்டுக் கேட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் கடந்த ஜன.28 அன்று புலனாய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘உலகின் அதி சக்தி வாய்ந்த சைபர் ஆயுதத்துக்கான போர்' என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் இஸ்ரேல் உடனான 2 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு கடந்த 2017-ல் பெகாசஸ் மென்பொருளை வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இக்கட்டுரை இந்தியாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இக்கட்டுரையை ’நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.சீனிவாசன் என்பவர் ’நியூயார்க் டைம்ஸ்’ நிர்வாகத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ‘‘தங்களது நாளிதழில் வெளியான புலனாய்வுக் கட்டுரையை இஸ்ரேல் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இக்கட்டுரை உலகநாடுகள் மத்தியில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்ந்து வரும் இந்தியாவின் நற்பெயரைக் சீர்குலைத்து, அவப்பெயரை உருவாக்கும் விதமாக திட்டமிட்டு உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. ஆதாரமற்றவை. எனவே இக்கட்டுரையை வெளியிட்டதற்காக ’நியூயார்க் டைம்ஸ்’ நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 100 கோடி இழப்பீடு கோரி சட்டரீதியாக வழக்குத் தொடரப்படும், என அதில் அவர் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் எம்.சீனிவாசன் கூறும்போது, ‘‘ இந்தியாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் காலகட்டத்தில் இக்கட்டுரையை ’நியூயார்க் டைம்ஸ்’ அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவில் மத்திய அரசிடம் ஏற்கெனவே உலக நாடுகளே வியக்கும் அளவுக்கு உளவு நிறுவனங்கள் உள்ளன. அந்த உளவு நிறுவனங்கள் முக்கிய நபர்களின் டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக் கேட்க வேண்டும் என நினைத்தால் அதற்காக இவ்வளவு பெரிய தொகையை செலவிட்டு, பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்க வேண்டிய அவசியமே இந்தியாவுக்கு கிடையாது.
உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கை கெடுக்கும் விதமாகவும், ஐக்கியநாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது என்பதாலும் இந்த கட்டுரையை ’நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளது. எனவேதான் மன்னிப்பு கோரி முதல் பக்கத்தில் செய்தி வெளியிடாவிட்டால் ரூ. 100 கோடி இழப்பீடு கோரி சட்டரீதியாக வழக்குத் தொடரப்படும் என அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன், என்றார்.