

ஆவடி: ஆவடி மாநகராட்சியின் 24-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட, மோட்டார் பம்ப் உதிரிப்பாக விற்பனையாளரான சிவா, நேற்று 500 ரூபாய் நோட்டுகளால் ஆன பண மாலையுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஆவடி மாநகராட்சி அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தார்.
வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் சிவா கூறும்போது, "ஜனநாயகத்தை பணநாயகம் வெல்லலாம் என நினைக்கிறது. ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் என, ஒவ்வொரு பகுதியிலும் பணம் கொடுக்கப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியும். இது தெரிந்தும், ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்களை மக்கள் வெற்றிபெறச் செய்யக் கூடாது. தேர்தலில் பணம் செலவு செய்தால், தோல்வியைத் தழுவுவோம் என்பதை அவர்களுக்கு மக்கள் புரிய வைக்கவேண்டும். இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே பண மாலையுடன் வந்து, வேட்பு மனுத்தாக்கல் செய்தேன்" என்றார்.