Published : 03 Feb 2022 09:24 AM
Last Updated : 03 Feb 2022 09:24 AM
மத்திய அரசின் தனியார்மயமாக் கலுக்கு எதிராக புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் தொடங்கிய தொடர் வேலைநிறுத்தப் போராட் டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளனர். முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவரது வாக்குறுதியை ஏற்று, இன்று முதல் பணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.
யூனியன்பிரதேசங்களில் உள்ள அரசு மின் துறைகளை தனியார்மயமாக்கும் தொடக்க நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்கு புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவை உருவாக்கி அவ்வபோது போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இக்குழுவினர், நேற்றுமுன் தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டத்தால் நேற்று முன்தினம் புதுச்சேரி நகர்ப் பகுதியின் சில இடங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இரண்டாம் நாளாக நேற்று தீயணைப்பு நிலையம் முன்பு மின்துறை ஊழியர்கள் ஏராளமா னோர் திரண்டு பேராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் இருந்து வந்திருந்த, இந்திய மின்துறை பொறியாளர்கள் சங்க நிர்வாகி சைலேந்திர டுஜே போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். கர்நாடக மாநில மின்துறை சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்று, போராட்டத்தினரை வாழ்த்திப் பேசினர்.
இப்போராட்டம் தொடர்பாக மின்துறை ஊழியர்கள் சங்க போராட்டக்குழுத் தலைவர் டி.அருள்மொழி கூறுகையில்,"மின் துறை தலைவர், ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுவது கண்டிக்கத்
தக்கது. இப்போராட்டத்தால பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களுக்கு அரசே காரணம்” என்று கூறினார்.
முதல்வருடன் பேச்சு
இதனிடையே, நேற்று இரவு சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "மின்துறை தனியார்மயமாக்கப்படுவதில் சாதக, பாதங்களை ஆராய்ந்து மத்திய அரசோடு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். புதுச்சேரியின் தற்போதையசூழலை மத்திய அரசிடம் எடுத்துச் செல்வோம். மின்துறை ஊழியர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், மக்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டு மத்திய அரசை அணுகுவோம். இப்பிரச்சினையை அவர்களிடம் தெரிவித்து உரிய முடிவை புதுச்சேரி அரசு எடுக்கும். போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக முதல்வரிடம் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நாங்களும் உத்தரவாதம் தந்துள்ளோம். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சேவையை செய்யமின்துறையினருக்கு தெரிவித்துள்ளோம். போராட்டத்தை திரும்பபெறுவதை முறையாக போராட்டக்குழுவினர் அறிவிப்பார்கள்" என்றார்.
அதைத்தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்க்கட்சித்தலைவர் சிவாவை சந்தித்தனர். அங்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் உடனிருந்தனர். அங்கு தங்கள் நிலைபாடு குறித்து போராட்டத்தினர் விளக்கினர்.
பின்னர் மின்துறை போராட்டக்குழுவின் போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கூறுகையில், "இரண்டு நாட்கள் போராட்டம் நடந்த சூழலில் முதல்வரிடம் பேசினோம். கலந்து ஆலோசிக்காமல் எம்முடிவும் எடுக்க மாட்டோம் என்றும், தொழிற்சங்கத்தின் கருத்துகளை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி மின்துறையை தொடர நடவடிக்கை எடுப்போம் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார். நாளை (இன்று) முதல் பணிக்குச் செல்கிறோம். போராட்டத்தை திரும்ப பெறுவது தற்காலிகம்தான். மின்துறையை தனியார்மயமாக்கும் பணி தொடர்ந்தால் மீண்டும் போராட்டம் தொடரும்"என்று தெரிவித்தனர்.
முதல்வருக்கு அந்த எண்ணம் இல்லை...
இப்பிரச்சினை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சியினர் முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று காலை சந்தித்தனர்.
இச்சந்திப்பு பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், "மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது என்று முதல்வரிடம் மனு அளித்தோம்.
புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கலாம் என்ற மனநிலையில் முதல்வர் இல்லை. மின்துறையை தனியார்மயமாக்கும் ஆதரவு கருத்து தெரிவித்துள்ள உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரினோம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT