

திருச்சி: வார்டு ஒதுக்கீட்டில் திமுகவுடன் நேரிட்ட அதிருப்தி காரணமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கவுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டத்தில் சட்டப்பேரவையின் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளும், வடக்கு மாவட்டத்தில் சட்டப்பேரவையின் முசிறி, லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளும் வருகின்றன. திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, திருச்சி மாநகராட்சி வார்டு தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகள் என்னென்ன என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை வரைவெளியாகவில்லை. அதேவேளையில், 30, 47 ஆகிய 2 வார்டுகள் கேட்டதாகவும், திமுக தரப்பில் இருந்து 51 வார்டை மட்டும் ஒதுக்க முடியும் என்றும் கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில், இன்று மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாலக்கரை காஜா கடை சந்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் வி.எம்.பாரூக், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் உமர் பாரூக், மாநில நிர்வாகி அன்சர் அலி, தெற்கு மாவட்டப் பொருளாளர் பி.எம்.ஹூமாயூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் கூறியது: "திமுக கூட்டணியில் திருச்சி மாநகராட்சியில் 2 வார்டுகளை ஒதுக்கக் கோரி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்ட வார்டுகள் ஒதுக்கப்படவில்லை. எனவே, எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டத்தில் வரும் திருச்சி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய வார்டு உறுப்பினர் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்து போட்டியிடுகிறது" என்றார்.